பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்ச்சபை முன்னால்...

109



"ஒலகம்மா, நீ எதுக்காக ஊர்ல இருக்கவங்கள பொட்டைப் பயலுவன்னு சொல்லணும்? சொல்லு. ஊர்னா மட்டுமரியாதி இல்லாமப் போயிட்டு."

ஊலகம்மை, திடுக்கிட்டுப் போனாள். அவள், அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான். இருந்தாலும் பதிலளித்தாள் :

"வயசான மனுஷன் கோட்டுக்குள்ள அடப்பட்டுக் கிடந்ததப் பாத்தும் சாட்சி சொல்லாத ஜனங்கள எப்டிச் சொல்றது?"

"ஒலகம்மா, ஒன்ன மறந்துடாத. ஒரு குத்தத்தச் சரிப்படுத்த இன்னொரு குத்தம் செய்யாத. ஊர்க்காரங்க பொட்டப்பயலுவ இல்லன்னு காட்டுறதுக்கு நினைச்சா நீ தாங்குவியா?"

இதற்குள் மாயாண்டி. நெடுஞ்சாண் கிடையாகக் கூட்டத்தின் முன்னால் குப்புற விழுந்தார். பிறகு, தலையை மட்டும் தூக்கிக்கொண்டு பேசினார்; "என் மவா முட்டாப்பய மவா. தெரிஞ்சி, தெரியாமப் பேசிட்டா, தப்புதான். கையில அடிச்சி காலால உதறிடுங்க. இனிம இப்டிப் பேச மாட்டா. நான் பொறுப்பு."

கூட்டத்தில் கொஞ்சம் உருக்கம் ஏற்பட்டது. அது நெருக்கமாகாமல் இருப்பதற்காக, மாரிமுத்து நாடார் தன் மோதிரக்கைகளை ஆட்டிக்கொண்டு, அய்யாவு நாடாரிடம் காதில் ஏதோ பேசினார். அது ஒப்பித்தது:

"நீ சொன்னா போதுமா? ஒன் மவா சொல்லட்டும்." "நான் ஆம்புள சொல்லுறேன். போதாதா? ஒம்ம மவா குத்தம் செய்தாலும், நீருதான ஜவாப் சொல்லணும். பொம்புள பொம்புளதான், மச்சான்."

"அதுக்காவ பொட்டப்பயலுவன்னு சொல்றதாவே?"

கூட்டத்தில் உருக்கம் கலைந்து, கோபம் கொந்தளித்தது. கசாமுசான்னு பேச்சுக் கேட்டது. சில இடங்களில் 'செறுக்கி மவா' என்ற வார்த்தையும் கேட்டது. மாயாண்டி 'புஜங்காசனம் செய்பவர்போல் நிமிர்த்தி வைத்த தலையை, மீண்டும் தரையில் போட்டுக் கொண்டு கும்பிட்டார். அய்யாவு நாடாருக்கு அதுவே போதுமானதாயிருந்தது. எவன் எப்படிப் போனாலும், தான் பெரிய மனுஷனாய் இருக்க