பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஒரு கோட்டுக்கு வெளியே ...



என்றாலும், உலகம்மைக்கு ஒரு வகையில் நிம்மதி! எப்படியோ பிரச்சினை. ஒருவழியில் முடிந்துவிட்டது. பலவேச நாடார், நிலத்தைக் காலி பண்ணச் சொன்னால் ஊரிலும் முறையிடலாம். மாரிமுத்து நாடாரும் ஒண்ணும் பண்ண முடியாது.

வீட்டுக்குப் போன உலகம்மை, வழக்கம்போல் லோகு கொடுத்த காகிதத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டாள். அவன் தொட்டுக் கொடுத்த காகித 'ஸ்பரிசத்தில்' சிறிது நேரம் வசமிழந்து போனாள். அவரு எந்த நேரத்துல குடுத்தாரோ என்னோட கஷ்டம் கொஞ்சங்கொஞ்சமா தீருது என்று சொல்லிக்கொண்டாள். பிறகு காகிதத்தை எடுத்து. காசு போட்டு, இப்போது காலியாக்கப் பட்டிருந்த உலம்மடிக்குள் வைத்துவிட்டு காகிதம் பறந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒரு சின்னக் கல்லை எடுத்து, அதன் மேல் வைத்தாள்.

மாரிமுத்து நாடார் பல்லைக்கடித்தாரென்றால், பலவேச நாடார் வேகமாக மூச்சு விட்டார். 'கடைசில இந்த அய்யாவு நாடாருக்கு மரியாத குடுத்து வெங்கப் பயல ஊரு முறைக்காக அம்பலத்துல வச்சா அவன் எப்பவும் யோசன கேக்கது மாதிரி கேக்காம உலகம்மய லேசா விட்டுட்டான். இருக்கட்டும், இருக்கட்டும்.

இந்த உலகம்ம எங்க போயிடப் போறா?

14. ஒடுங்கி நின்று ...

புயலுக்குப்பின் அமைதி வருமோ, வராதோ, உலகம்மைக்கு. அந்த அமைதிக்குப் பிறகு, புயல் வந்தது. ஒரு வாரம் வரைக்கும் ஒன்றுந் தெரியவில்லை. பின்னர், ராத்திரி வேளையில் அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவள் வீட்டுக் கூரையில் திடீர் திடீரென்று கற்கள் விழுந்தன. இடுப்பில் எப்போதும் இருந்த கத்தியுடன் மாயாண்டி சொல்வதைக் கேட்காமல் அவள் வெளியே போவாள். யாருங் கிடையாது, எதுவும் கிடையாது.

உலகம்மை, ஊரில் சொல்லாமல் பொறுத்துக் கொண்டாள். ஆனால் நாளுக்கு நாள் கற்கள் அதிகமாக விழத் துவங்கின. ஒரு கல், ஏற்கனவே ஓட்டையாய்க் கிடந்த கூரை வழியாக உள்ளே விழுந்தது. மாயாண்டியின் தலைக்கும் அதற்கும் அரை அங்குலந்தான் இடைவெளி. உலகம்மையும் ஒரு கல்லை வைத்துக்கொண்டு, வெளியே உட்கார்ந்தாள். கல் விழவில்லை. கண்ணயர்ந்து வீட்டுக்குள் போய்