பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் வயல் நட்டு...

3


பயனில்லை. இப்போது மிஞ்சிப் பார்க்கலாமா என்று நினைக்கிறார்கள். ஊரை ஒட்டி, குளத்துக் கரையின் வடமுனையில் இருக்கும் இந்த மடைக்குச் சற்றுக் கீழே ஒரு ஓடை துவங்குகிறது. இந்த ஓடை வழியாகத்தான் கொண்டலப்பேரிக்கு நீர் போக வேண்டும்.

அந்தக் குளத்துப் பாசனத்தில் முந்நூறு ஏக்கர் நிலமும் இருநூறு கிணறுகளும் இருக்கலாம். கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. அம்பாசமுத்திரம் பக்கம் கதிரறுக்கப்போய் நீச்சலையும் கற்றுக்கொண்டு வந்த வாலிபர்கள், கிணற்றின் ‘குத்துக்காலில்’ ஏறி நீருக்குள் பல்டி அடித்தார்கள். அவர்கள் அப்படிக் குதிப்பதை சில பையன்கள் ஆச்சரியப்படத்தக்க முறையிலும், சில முதியவர்கள் ஆச்சரியப்படத்தகாத முறையிலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில பையன்களுக்கு இடுப்பில் கயிறு கட்டப்பட்டு, பெரியவர்கள் கயிறுகளைப் பிடித்துக் கொள்ள, பையன்கள் கிணற்றுக்குள் நீச்சல் கற்றார்கள். ‘எம்மா, எய்யா, வாண்டாம், தூக்கும் மாமா’ என்று ஒரு பையன் கத்த, கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாமா சிரித்துக்கொண்டே, பையனைக் கயிற்றின் மூலம் வெளியே தூக்கி விடுகிறார். உடனே மச்சான்காரன், ‘அரவம்’ தெரியாமல் பின்னால் வந்து, பையனைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கைதட்டிச் சிரிக்கிறான். பையன் மீண்டும், ‘எம்மா, எய்யா, செத்தேன், செத்தேன், தூக்கும், செத்தேன், எம்மா எய்யா’ என்று நீருக்குள் புழுங்குகிறான்.

வேறுசில கிணறுகளில், நாற்று நட்டுக்கொண்டிருக்கும் பெண்களை ‘வசியம்’ செய்வதுபோல், சில வாலிபர்கள் போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவன், கொழுஞ்சிச் செடியைக் கொண்டுபோய் கிணற்றுக்குள் எவ்வளவு ஆழத்திற்குப் போக முடியுமோ, அவ்வளவு ஆழம் போய், விட்டுவிட்டு வர வேண்டும். இன்னொருவன், அதை எடுத்துக் கொண்டு வர வேண்டும். சிலர், தென்னை மரத்தில் பாதிதூரம் ஏறி நின்று கொண்டு, அங்கேயிருந்து கிணற்றுக்குள் குதித்தார்கள். இதுவரை அனாவசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் இப்போது ஆச்சரியமாக அந்த இளைஞர்களைப் பார்த்தது மட்டுமல்லாமல், ‘ஏ... அப்படி எப்படிக் குதிக்க முடியுது? கொளுப்பு பாத்தியளா?’ என்று செல்லமாக ஒருவருக்கொருவர் சிணுங்கினார்கள். எல்லாப் பெண்களும் தென்னை மரங்களைப் பார்ப்பதைக் கவனித்த ‘கொழுஞ்சிச் செடி’ வீரர்களும் தென்னை மரங்களில் ஏறப்போனார்கள். ‘பயல்கள் ஏறுகிற கையோட இளனியையும் புடுங்கினாலும் புடுங்கலாமுன்னு’ நினைத்த