பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பேசிவிட்டதால், இப்போது இவருடைய கோஷ்டி ஆளாகக் கருதப்படுகிறார். இதனால் கிடைக்கிற ஒட்டுக்களும் கிடைக்காமல் போகலாம். எல்லாத்துக்குந்தலையாட்டுகிற ஊர்ஜனங்கள், ஒட்டு என்று வரும்போது, அவரை ஒட்டி விடலாம்.

'நாலையும்' யோசித்த பஞ்சாயத்துத் தலைவர், மாரிமுத்து அண்ணனிடம், ஊர்க்கூட்டத்தைக் கூட்டி, உலகம்மைக்கு எந்த வகையிலாவது ஒரு வழி வாய்க்கால் பண்ண வேண்டும் என்று வாதாடினர்ர். மாரிமுத்து நாடார் நாளைக் கடத்திக் கொண்டு வந்தார். அவர் சம்மதித்தாலும், பலவேச நாடார் முடியாது என்று வாதிட்டார். பல காட்டில் பல தண்ணி குடிச்ச பலவேச நாடாருக்கு. இப்படி ஒரு நாள் வாதிட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அதை அத்தானிடம் சொன்னார். அருமையான கிரிமினல் யோசனை அது.

ஊர்க்கூட்டம் கூட்டப்பட்டது. இப்போதும் குட்டுப்பட்ட அய்யாவுதான் அதற்குத் தலைவர் போல் தோன்றினார். மாரிமுத்து மனங்கோணாம எப்டி வழக்குப் பேசலாம்?’ என்று பரீட்சைக்குப் படிக்கும் பையன் மாதிரி, யோசித்து வைத்திருக்கிறார். ஊர்க்கூட்டத்திற்கு ஒரு அந்தஸ்து வேண்டும் என்பதற்காக, ஆசாரி ஒருவரும், கணக்கப்பிள்ளையும், ராமையாத்தேவரும் அவரோடு இருந்தார்கள்.

ஊர்க்காரர்களும் திரண்டு வந்திருந்தார்கள். பலபேருக்கு உலகம்மை படும் அவதி நெஞ்சை உருக்கியது. இந்தத் தடவை கொஞ்சம் எதிர்த்துப் பேச வேண்டும் என்றுகூட நினைத்துக் கொண்டார்கள். உலகம்மையும், முற்றுந்துறந்த முனியைப்போல், அய்யாவை இழுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

முதலில் வழக்கம்போல் பல பொதுப்படையான விஷயங்கள் பேசப்பட்டன. "குளம் உடையுமா, மதகைத் திறக்கணுமா" என்பதிலிருந்து ஜனதா அரசாங்கம், அதிமுக, திமுக, காங்கிரஸ், வெளியூரில் நடந்த ஒரு கொலை, மாரிமுத்து நாடாரின் சர்க்கரை நோயின் இப்போதைய தன்மை முதல் பல விவகாரங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அய்யாவு, ஒரு தடவை கனைத்துக்கொண்டார். கூட்டம் அமைதியாகியது. பிறகு. உலகம்மையை வரச்சொல்லி சைகை செய்தார். அவள், அவர் அருகில் வந்து நின்றாள். தன் இக்கட்டைப் பற்றி அவர் கேட்கப் போகிறார் என்று நினைத்து. கஷ்டங்கள் கொடுத்த