பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்ப்பகை மேலிட...

121



கம்பீரத்துடன் அவள் நின்றாள். அய்யாவு, அதைக்கேட்காமல் எவரும் எதிர்பார்க்காத இன்னொன்றைக் கேட்டார்.

"ஒலகம்மா ஒன் மனசுல என்னதான் நெனச்சிக்கிட்டிருக்க? முப்பது ரூபா அபராதம் போட்டோமே. ஏன் கட்டல இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்."

எதிர்பாராமல் அடிபட்ட திக்குமுக்காடலில் தவித்துப்போன உலகம்மை, அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். ஆட்டுக்கு ஓநாய் நியாயம் பேசிய கதைதான். அவளால், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

"என்னய்யா நியாயம் பேசுறிய, நியாயம் என் வீட்ட ஜெயிலுமாதிரி அடச்சாச்சி. இருக்கிற ஒரு வழியிலயும் கழிசல போடுறானுவ! போற வழியில ராமசாமியும் வெள்ளச்சாமியும் அசிங்கமா தேவடியா செறுக்கின்னு என்னப் பாத்துப் பாடுறாங்க. அவனுகளைக் கேக்க நாதியில்ல..."

தலைவர் இடைமறித்தார்:

"இந்தா பாரு ஒலகம்மா, ஆம்புளைங்கள அவன் இவன்னு பேசப்படாது. இது ஊர்ச்சப. ஒன் வீடுல்ல."

உலகம்மை தொடர்ந்தாள்:

"அவங்க என்னத் தேவடியா செறுக்கின்னு பேசுறாங்கன்னு சொல்லுறேன். அதை ஏன்னு கேக்காம நான் அவன்னு வாய்தவறிச் சொல்லிவிட்டத பிடிச்சிக்கிட்டியரு. பரவாயில்ல. என்ன நாயாய் கேவலப்படுத்துறாங்க. பேயாய் அலக்கழிக்கிறாங்க. ராத்திரி வேளயில கல்லையும் கட்டியையுந் தூக்கி எறிறாவ. இதுவள கேக்க ஒமக்கு வாயில்ல. நான் அபராதங் கட்டாதத கேக்க வந்துட்டாரு. ஊர் நியாயமுன்னா எல்லாத்துக்கும் பொதுத்தான். எனக்கு ஒத்தாச பண்ணாத சபைக்கு நான் எதுக்கு அபராதங் கட்டணும்? கையோட காலோட பிழைக்கிறவா, வயசான மனுஷன கவனிச்சிக்கிட்டு இருக்கவா, எப்டி ஒடனே அபராதங்கட்ட முடியுமுன்னு, யோசிச்சி பாத்தீரா? ஒம்ம பொண்ணாயிருந்தா இப்டிக் கேட்பீரா?"

அய்யாவு, எதோ பேசுவதற்கு வாயெடுத்தபோது, பலவேச நாடார், "ஒன்னால கட்டமுடியுமா முடியாதா? வசூலிக்கிற வெதமா வசூலிக்கத் தெரியும்" என்றார்.

கோ.9.