பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்ப்பகை மேலிட...

125



பேசாதபோது நாம ஏன் பேசணும்' என்றும் யோசித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர். இப்போது அய்யாவு நாடாரின் உணர்ச்சிப் பிழம்பில் வெந்து வேக்காடாகி, உலகம்மைமீது கட்டுக்கடங்காச் சினத்தைக் கக்கத் துடித்தனர். அய்யாவு. இன்னொரு ஊசியை வாழைப்பழத்தில் ஏற்றினார்.

"இப்ப என்ன சொல்ற இவங்கள பொட்டப்பயலுவன்னு இன்னும் நினைச்சா அபராதங் கட்டாண்டாம். சொல்லு."

உலகம்மை சிறிது யோசித்தாள். வயக்காட்டில், பிராந்தன். மானபங்கமாகப் பேசியபோது, தோள் கொடுத்தவர்கள் அந்த ஊர்ப் பெண்கள். இங்கே கண்டும் காணாதது மாதிரி, ஒரு அனாதைப் பெண் படும்பாட்டைத் தெரிந்தும், தெரியப்படுத்தாமல் இருக்கும் ஆண்களைவிட, அவர்கள் எவ்வளவோ மேல்.

அய்யாவு இறுதி எச்சரிக்கை விடுத்தார்:

"சொல்லும்மா இவங்க பொட்டப்பயலுவ தானா இல்லியா?"

உலகம்மைக்கு தலைக்குமேல் சாண் போன தண்ணீர் முழம் போனால் என்ன என்கிற விரக்தி. வயக்காட்டுப் பெண்களை நினைத்துக் கொண்டாள். வாய் செத்த, இந்த ஆண்களையும் நினைத்துக் கொண்டாள்.

"நான் பொட்டப்பயலுவன்னு சொன்னது தப்புதான். பொட்டச்சிங்க தைரியமாயும் நியாயமாயும் இருக்கத என் கண்ணால பாத்துருக்கேன்."

உலகம்மை, சொன்னதன் பொருள், உடனடியாக சபைக்குப் புரியவில்லை. அது புரிந்ததும் ஒரே அமளி. ஒரே கூச்சல்! கூட்டமே எழுந்தது.

"எவ்ளவு திமிரு இருந்தா இப்டிப் பேசுவா? இவள விடக்கூடாது. கொண்டய பிடிங்கல. தலயச் சீவுங்கல. சீலயப் பிடிச்சி இழுங்கல. மானபங்கப் படுத்துங்கல. ஏமுல நிக்கிய? செறுக்கிய இழுத்துக்கொண்டு வாங்கல."

பலவேச நாடாரும், மாரிமுத்து நாடாரும் கூட்டத்தைச் சமாதானப்படுத்தினார்கள். அதட்டிக்கூடப் பேசினார்கள்.