பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"உக்காருப்பா. உட்காருங்க. அவாதான் அறிவில்லாம பேசினதுக்காவ நாமளும் அறிவில்லாம நடந்தா எப்டி? அட ஒங்களத்தான், உட்காருங்கடா, உட்காருங்கப்பா."

கூட்டம் உட்கார்ந்தது: அய்யாவு தீர்ப்பளித்தார்:

"ஒலகம்மா கட்டுப்பட மாட்டேன்னுட்டா, அது மட்டுமல்லாம பொட்டப் பயலுகன்னு ஒங்களச் சொன்னத சரிங்றது மாதிரி பேசிட்டா. பொம்பளய அடிச்சா அசிங்கம். அவள யாரும் தொடப்படாது. எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பிரயோசனமுல்ல..

"அதனால அவள ஊர்ல இருந்து இன்னையில இருந்து தள்ளி வைக்கிறோம். யாரும் அவகூடப் பேசப்படாது. நல்லது கெட்டதுக்கு யாரும் போவக்கூடாது. அவளயும் கூப்புடக் கூடாது. எந்த கடக்காரனும் அவளுக்கு தட்டுமுட்டுச் சாமான் குடுக்கக்கூடாது. வண்ணான் வெளுக்கக்கூடாது. ஆசாரி அகப்ப செய்யக்கூடாது. யாரும் கூலிக்குக் கூப்புடக் கூடாது. ஒரு தண்ணிகூட அவளுக்குக் குடுக்கக்கூடாது. அவா குடுக்கத வாங்கக்கூடாது. அப்படி யாராவது மீறி நடந்தா அவங்களயும் தள்ளி வச்சிடலாம். அப்பதான் ஊர்க்காரங்க பொட்டப் பயலுவ இல்லன்னு அர்த்தம். என்ன, நான் சொல்றது சரிதானே."

  • சரிதான். சரியேதான், இது மட்டும் போதாது."

அய்யாவு இறுதியாகப் பேசினார்:

"இப்போதைக்கு இவ்ளவு போதும். பொறுத்துப் பாக்கலாம்."

உலகம்மை, மேற்கொண்டு அங்கே நிற்கவில்லை. ஒன்றும் புரியாமல் குழந்தையாகி நின்ற மாயாண்டியின் கையைப் பிடித்துக்கொண்டே, நடந்தாள், மாயாண்டிக்குத் தண்டனையின் தன்மை இப்போதுதான் முழுவதும் புரிந்தது.

"தள்ளி வச்சிட்டாங்களே, உலகம்மா. நம்மள தள்ளி வச்சிட்டாங்களே."

உலகம்மை கம்பீரமாகச் சேலையில் படிந்த தூசியைத் தட்டிவிட்டுக் கொண்டு சொன்னாள்:

"நாமதான் ஊர தள்ளி வச்சிருக்கோம். சரி நடயும்"