பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. ஒறுக்கப் பட்டு...


ர் விதித்த தண்டனையின் கடுமையை, உணரத் துவங்கினாள் உலகம்மை. எந்தப் பெண்ணும் அவளிடம் பேசுவது இல்லை . எதிரில் சந்தித்த பல பெண்களிடம் இவளாக வலியப் பேசினாலும், அவர்கள் ஒதுங்கிப் போனார்கள். ஒரு சில பெண்கள், குறிப்பாக, 'அடியே, அடியே' என்று உரிமையோடு பேசும் பெண்கள், அவளைப் பார்த்ததும் அழுதுவிடுவதுபோல் முகத்தை வைத்துக் கொண்டார்கள். சிலர், அவளைப் பார்க்கும்போது கண்களைக்கூடத் துடைத்துக் கொண்டார்கள். ஆனால் யாரும் பேசவில்லை. பீடி ஏஜெண்ட் ராமசாமிக்கு இவர்கள் பேசுவது தெரிந்தால், பீடி இலை கிடைக்காது.

ஊர்க்கிணற்றுக்கு, வடக்குப்புறமாகச் சுற்றித்தான் அவள் தண்ணீர் எடுக்கப் போவாள். அங்கேதான், சில நிமிடங்களாவது கவலையை மறக்கும் அளவிற்கு, இதரப் பெண்களோடு அவள் சிரித்துப் பேசுவது வழக்கம். சில சமயம் 'நான் ஒண்ணும் இவங்க கஷ்டப்படுத்துறதுல அசறுறவள் இல்ல" என்று அவளை அறியாமல் எழும் உணர்வை வெளியே காட்டுபவள்போல், கொஞ்சம் அதிகமாகவே சிரித்துப் பேசுவாள். அவளுக்கு, ஊரின் ஆண்கள் மீதுதான் கோபமே தவிர, அவர்கள் மனைவிமார்கள் மீதல்ல. ஆனால் அங்கேயும் அவளைப் பார்த்தும் 'போழா ஒனக்குத் தோண்டி போட இடமுல்ல' என்று செல்லமாகப் பேசும் பெண்களில் ஒருத்திகூட, அவளிடம் பேசவில்லை அவளைப் பார்த்ததும், கிணற்றுச்சுவரில் போதுமான இடத்தை விட்டுக் கொடுத்தார்கள். ஒருநாள் அவள் 'தோண்டி' மூலப்படியில் மோதிக் கிழிந்துவிட்டது. பனை ஓலையில் செய்த அந்தத் தோண்டியில்'. நீர் ஏற முடியாத அளவிற்குப் பெரிய ஓட்டை விழுந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள் உலகம்மை. மற்ற சமயமாக இருந்தால், யாராவது தம் தோண்டியைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அவளுக்குக் கேட்க மனமிருந்தும், மார்க்கம் தெரியவில்லை . ஒரு பெண் அதுவும் மாரிமுத்து நாடாருக்குச் சொந்தக்காரப் பெண், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவளுக்குத் தன் தோண்டியைக் கொடுக்கப்போனாள். அதற்குள் 'பிராந்தன்' வந்துவிட்டான். உலகம்மையிடம் யாரும் பேசுகிறார்களா என்பதைப் பார்வையிட வந்தவன் போல், தன்னை , அடிக்கடி வரும் ஹெட் கான்ஸ்டபிளாக நினைத்துக் கொண்டு, ஊர்க் கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் புருஷனிடம் உதைபட விரும்பவில்லை. அதுவும், அவள் கருத்துப்படி - 'உருப்படியில்லாத