பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பயல்' பிராந்தன்மூலமாக. உலகம்மையின் கண்ணீர் அந்தக் கிணற்று நீருக்குள்ளும் விழுந்தது. மௌனமாக, உடைந்துபோன தோண்டியைத் தோளில் போட்டுக்கொண்டு, வெறும் பானையுடன் வீட்டுக்குள் வந்தாள். தோண்டி அவளுக்குச் செய்யத் தெரியாது. செய்யத் தெரிந்த ராமையாத்தேவர், செய்து கொடுக்க மாட்டார். சட்டாம்பட்டிக்கு, எப்படியாவது ஒரு பனை ஓலையை எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

ஒருநாள் மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும், அடுப்புப் பற்ற வைக்கப்போனாள். வத்திப் பெட்டியில் ஒரே ஒரு குச்சிதான் இருந்திருக்கிறது. அதுவும் அணைத்துவிட்டது. தீப்பெட்டிக்கு எங்கே போவது? கடைக்காரர்களிடம் கேட்கமுடியாது. அக்கம் பக்கத்துக்காரர்களிடம் கேட்கவும் முடியாது. அப்படிக் கேட்குமளவிற்கு ரோஷங்கெட்டவளுமல்ல. இருட்டு வேறு துவங்கிவிட்டது. மாயாண்டி வேறு. பசியால் துவண்டு கொண்டிருப்பவர்போல், வயிற்றுக்குள் இரண்டு கைகளையும் அணையாகக் கொடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். ஒரே ஒரு தீக்குச்சி இருந்தால் போதும், எங்கே போவது?

அந்தச் சின்ன விஷயம், அவளுக்கு அன்றைய ஜீவனத்தின் பெரிய விஷயம். அதோடு இந்த இருட்டில், அந்த ஒற்றையடிப் பாதையில், இப்போது சரமாரியாக உட்கார்ந்திருப்பார்கள். எப்படியோ, அவர்கள் போவது வரைக்கும் இவள் காத்திருந்தாள், எழுந்து விட்டார்களா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவர் மாற்றி ஒருவராக உட்கார்ந்திருந்தார்கள். என்றாலும், அந்த அனாசாரம் பிடித்த வழியாக நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொண்டலப்பேரி கிராமத்திற்கு நடந்தாள், ஒரே ஒரு தீப்பெட்டிக்காக. அப்படி அவள் நடக்கும்போது, அவள் வயிற்றில் ஒரு தீக்குச்சியை வைத்திருந்தால், அதில் தீப்பிடித்திருக்கும்!

அவளுக்கு இரண்டே இரண்டு புடவைகள்தான். ஒரே ஒரு ஜாக்கெட், புடவைக்கு 'ஷிப்ட் டூட்டி': ஜாக்கெட் மார்க்கண்டேயர்; ஒரு புடவையைக் கட்டிக்கொண்டு, இன்னொரு புடவையைத் தோட்டத்துக் கிணற்றில் 'துவைத்து' விட்டு வந்து கொண்டிருந்தாள். தோட்டத்துச் சுவரில் தம்பிடித்து ஏறியபோது, ஏற்கனவே இற்றுப் போயிருந்த ஜாக்கெட் 'டார்ரென்று' கிழிந்து விட்டது. அவளுக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது. மாராப்பு முனையை எடுத்து இடுப்பைச் சுற்றி மறைத்துக்' கொண்டாள். அது வயிற்றைக் காட்டிக்கொண்டு vie ,நோயோக கண்டி