பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

ஒரு கோட்டுக்கு வெளியே ...



சிறைச்சாலையில் தனிமையில் இருந்து விடலாம். அத்துவானக் காடுகளில் தனிமையில் இருந்துவிடலாம். ஆனால் மனிதர்களுக்கு மத்தியில் வழிந்தோடும் மக்கள் பெருக்கத்திற்கு முன்னால், தனிமையில் இருப்பதென்பது, அதை அனுபவித்த உலகம்மைக்கு மட்டுமே தெரியும். அந்த ஜன சமுத்திரத்தில், அவளுக்குத் தனிமைத் தாகத்தைப் போக்க ஒரு மனிதத் துளிகூடக் கிடைக்கவில்லை . தனிமை என்றாலும் பரவாயில்லை, இது தனிமையாக்கப்பட்ட தனிமை. கண்ணுக்குப் புலப்படும் சுவர்களைவிடக் கெட்டியான புலனாகாத சிறைச்சாலை அது. ஒருவரும் பேசாமல் இருப்பது, அவளைப் பெரிதும் பாதித்தது. எப்போதும் பேசும் நாராயணசாமிகூட, லேசாகச் சிரித்தாரே தவிரப் பேசவில்லை . இந்தச் சமயத்தில் சரோஜாவிற்கும் பலவேச நாடார் மகன் தங்கப்பழத்திற்கும் நிச்சயதாம்பூலம் ஆகிவிட்டது. இதனால் சமாதானம் அடைந்த பலவேச நாடார், உலகம்மையைப் பற்றி அதிகமாக அலட்டிக்கவில்லை . ஆனால், "போயும் போயும் குடிகாரப்பய மவனுக்கு என் மவா ‘வாக்கப்பட வேண்டியதாயிட்டே!" என்று மாரிமுத்து நாடார் மனைவி, வாயிலும் வயிற்றிலும் அடித்ததோடு, அந்தப் பனயேறிப் பயமவா கடைசில பனயேறிப் புத்தியக் காட்டிட்டாளே காட்டிட்டாளே!" என்று தன் அழுகையைக் கணவனிடம் காட்டினாள். அவருக்கும், மனைவி சொல்வது சரியாகத் தெரிந்தது. 'எம்.ஏ. படிச்ச லோகு எங்கே எதுக்கும் உதவாத தங்கப்பழம் எங்கே? பட்டம் பெற்ற அவன் எங்கே? 'பட்டை ' தீட்டிய இவன் எங்கே?'

மாரிமுத்து நாடாருக்கு, ஆவேசமான ஆவேசம்! மகளைப் பாழுங்கிணற்றிலே தள்ளியதற்குக் காரணமான உலகம்மையை ஒழிக்காதது வரைக்கும், அவருக்கு உறக்கம் பிடிக்காது போல் தோன்றியது. பலவேச நாடாரின் காதை அடிக்கடி கடித்தார். உலகம்மையின் வீட்டுக்கு வடக்கே இருந்த தோட்டத்தின் சொந்தக்காரனைப் பார்த்தார்.

ஆனால் உலகம்மைக்கு, அந்தத் துன்பத்திலும் நிச்சயதாம்பூலம் ஒரு இன்பத்தைக் கொடுத்தது. 'பாவம் சரோசாக்கா, கடைசில அவளுக்கும் ஒரு வழி கிடச்சிட்டு, காலு, கையி கெதியா இருக்கணும்.'

உலகம்மைக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பு லோகுவைப்பற்றி அப்போ இப்போவாக' நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, இந்த நிச்சயதாம்பூலத்திற்குப் பிறகு, அடிக்கடி அவன் நினைவு வந்தது. துன்ப அழுக்கை, அந்த இன்பச்சோப்பால் போக்கிக்கொண்டிருந்தாள்.