பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

ஒரு கோட்டுக்கு வெளியே ...



எண்ணு சொல் படிக்காட்டாது. இதே மாதாலும், அதாவது ஒரு மரியாதை வரணுமுன்னு நினைத்துதான் உதவி பண்றாங்க. நாடார் ஒருவன் படிக்காவிட்டாலும், அவனுக்குச் சமூகத்துல ஒரு மரியாத இருக்கும் இதே மாதிரி முதலியாருக்கும் ஆனால், ஹரிஜன் படிக்காட்டா மரியாதையே கிடையாது! உதாரணமா ஒண்ணு சொல்றேன். தப்பா எடுக்காதிக. நான் ஒங்கள விட ரெண்டு வயசு பெரியவன்னு எங்க அப்பா சொல்வார். எனக்கு எப்டித் தெரியுமுன்னு நினைக்கிங்களா? ஒங்கய்யா பனையேறும்போது எங்க அப்பா என்னை எடுத்துக்கிட்டு ஓலை வாங்கப் போவாராம். ஒங்கய்யா என்னைப் பறையன்னுகூடப் பாக்காம எடுத்து முத்தங் கொடுப்பாராம்!"

"எதுக்குச் சொல்றேன்னா நீங்ககூட ஒங்களவிட வயசுல பெரிய என்னை 'நீன்னு' சொல்ல வந்துட்டு, அப்புறம் உதட்டக் கடிச்சிங்க! ஏன்? நான் படிச்சிருக்கதுனால. இதனால போகப் போக எங்க ஆட்களையும் நீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவிங்க. இதுக்குத்தான் - இந்த மாற்றம் வரணுமுன்னுதான் ஹரிஜனங்கள், சர்க்கார் படிக்க வைக்குது, ஆனால் எங்க ஆட்களே இதப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாக இதனால மொதல்ல இங்கயே ரெண்டு வருஷம் வேலைக்குப் போகாம தங்கி ரெண்டுல ஒண்ணு பாக்கப்போறேன்."

வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த ராமக்கா, திருப்தியடையவில்லை; இன்னும் எதிர்த்துப் பேசினாள்:

"நீதான் ஒன்ன மெச்சிக்கணும். வண்ணாரு, நாவிதருக்குத் துணி வெளுக்க மாட்டேங்காரு. நாவிதரு. வண்ணானுக்குச் செறைக்கதவிட, கழுதக்கிச் செறைக்கலாமுன்னு சொல்றாரு! சக்கிலியங்க நமக்குச் செருப்புத் தைக்க மாட்டேன்னுறாக| நாம அவங்களுக்குப் பெட்டி செய்ய மாட்டேங்கறோம். ஹரிஜனங்களே ஒருத்தருக்கொருத்தர் முதலியார், நாடார் மாதிரி வித்தியாசம் வச்சிருக்கும்போது. மேல்சாதிக்காரங்களத் குத்தம் சொல்ல எத்தனாவது சட்டத்துல இடமிருக்கு? பேச வந்துட்டான் பேச."

அருணாசலமும், விட்டுக் கொடுக்கவில்லை :

"போகப் போகப் பாரு. நீ சொன்ன அத்தன பேரயும் ஒண்ணாச் சேக்கப் போறேன். நம்ம இனத்துல மேல்சாதி மாதிரி நடக்கிற பணக்காரங்களத் தள்ளி வச்சுப்புட்டு மேல்சாதியில இருக்கிற ஏழை எளியவங்கள நம்மோட சேக்கப்போறேன் ஏன்னா ஹரிஜனங்களைவிட மோசமான நிலையில் பலர் மேல்சாதியில இருக்காங்க. இவங்க சாதி மயக்கத்தக் கலச்சிட்டா ஊரயே கலக்கிடலாம்."