பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

ஒரு கோட்டுக்கு வெளியே ...



உலகம்மைக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. கனவாக இருக்கும் என்று சுற்றுமுற்றிலும் பார்த்தாள். தலை தெறித்துத் தனியாக விழுந்து விட்டது போன்ற பிரமை; நெற்றி கனத்து, கண்ணிமைகளை மேல்நோக்கி இழுத்தது.

சேரிப்பெண்களுக்கும் கோபம் ஏற்பட்டது.

"கட்டயில போறவனுக. ஒரு பொம்பளய கொடுமப்படுத்துறதுக்கு அளவு வேணாமா? ஒதுங்கிப்போற மனுஷியயும் ஓட ஓட விரட்டுனா எப்டி? ஓடுற நாயக் கண்டா விரட்டுற நாய்க்குத் தொக்குங்றது சரிதான். அருணாசலம், இத நீ சொம்மா விடப்புடாதுடா."

அருணாசலம், உதடுகளைக் கடித்துக்கொண்டான். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு "கவலப்படாதிங்க. கோர்ட்டுன்னு வந்தாலும் வரட்டும். நான் கலெக்டருக்கு மனுப் போடுறேன். எப்பவாவது கலாட்டா பண்ண வந்தாங்கன்னா ஒரு வார்த்த அய்யாகிட்டச் சொல்லி அனுப்புங்க. பின்னிப்பிடலாம் பின்னி. சமபந்திப் போஜனத்துக்கு இங்க வந்து ஆள் பிடிக்க வருவாங்க! அப்போ புடிச்சிக்கிறேன். மொத்தத்துல இந்தச் சேரி ஒங்க வீடுமாதிரி. எப்ப வேணுமுன்னாலும் வரலாம்; என்ன வேணுமுன்னாலும் கேக்கலாம். ஒங்க அய்யா எங்க ஆட்களுக்குக் கொடுத்த பனை ஓலையையும் பனங்குருத்தையும் இன்னும் எங்க பெரியவங்க சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்ன வந்தாலுஞ்சரி, கால்ல கையில மட்டும் விழுந்திடாதிங்க. கலகம் நடந்தாலும் கவலப்படாதிங்க. கலகம் பிறந்தாதான் நியாயம் பொறக்கும்."

ராமக்காவால் அழுகையை அடக்க முடியவில்லை. உலகம்மையை. தன் நெஞ்சத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டே "இந்த முகத்தப் பாருங்க. பச்ச மதல. இதப் பாத்தா அழுவுற பிள்ளயும் சிரிக்கும். இதைப்போயி நாசமாப் போறவனுக நாசம் பண்ணுறாங்கள. அவங்க காலுல கரையான் அரிக்க. நடுராத்திரியில துள்ளத்துடிக்கச் சாவ. அவனுக பிள்ளிகளுக்கு இப்டி வராமலா போவும்? எடாத எடுப்பு எடுக்கிறானுக. படாதபாடு படாமப் போகமாட்டாங்க. நீ, நீங்க ஏன் நாடாரும்மா அழுவுறிக? எழுங்க. கண்ணீ ரு அவங்கள கடலுல போயி ஆக்கும்! அழாதம்மா. அழாதிங்கம்மா."

இன்னொரு பெண்ணாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை: "அழாதம்மா அழாதம்மா" என்று அழுதுகொண்டே சொன்னாள்.