பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

ஒரு கோட்டுக்கு வெளியே ...


துடித்தார்கள். மதகுகளை உடைக்கவேண்டும் என்றும் இளவட்டங்கள் வட்டமடித்தனர்.

மேல்ஜாதிக்காரர்களையும் சும்மா சொல்லக்கூடாது. பிள்ளைமார், நாடார், தேவர் என்ற ஜாதி வித்தியாசமில்லாமல், ஒருதாய் மக்கள்போல் ஒன்று திரண்டார்கள். வாயில்லாப் பூச்சிகளாய்க் கிடந்த சேரியர், விஷப்பூச்சிகளாய் மாறிய விந்தையை இன்னும் அவர்கள் ஜீரணிக்க முடியாமல் திண்டாடினாலும், “பறப்பய மக்கள ஓடோட விரட்டாட்டா நாம இருந்ததுல புண்ணியமில்ல” என்று சொல்லி, மரம் வெட்டும் தேவர்களையும், ஆடுமேய்க்கும் கோனார்களையும், பனையேறும் ‘சானார்’களையும், கிணறு வெட்டும் இதர மேல்ஜாதிக்காரர்களையும், நிலப்பிரபுக்கள் ஒன்று திரட்டினார்கள். மதகுகள் உடைக்கப்பட்டால் அவற்றை உடைக்கும் மண்டைகளை உடைப்பதற்காக மாரிமுத்து நாடார், பஞ்சாட்சர ஆசாரி, மாரிமுத்துச் செட்டியார் ஆகியோர் மண்வெட்டிகளையும், கோடரிகளையும், வெட்டரிவாட்களையும் விநியோகித்தார்கள்.

இதற்கிடையில், நெல்லையில் வெளியாகும் பத்திரிகை ஒன்று. அருணாசலம் கைதாகி விடுதலையானதையும். அவன் விடுதலையாகி, உண்ணாவிரதம் இருப்பதையும், ஊரில் பதட்ட நிலை நிலவுவதையும் ‘மூன்று காலத்திற்கு’ச் செய்தியாக வெளியிட்டது. பெட்டிஷன்களை ‘ரொட்டினா’க் கவனித்து வந்த மாவட்ட அதிகாரிகள், அந்தப் பத்திரிகையைப் பார்த்ததும் பதைபதைத்தார்கள்; படபடத்தார்கள். விஷயம் மந்திரிகளுக்கும், பெரிய அதிகாரிகளுக்கும் போகும் முன்னால் ஏதாவது செய்தாக வேண்டும்!

மாவட்டக் கலெக்டரே. அங்கு வந்துவிட்டார். பி.டபிளியூ. எஞ்சினியர்களும், குளத்து மதகைத் திறந்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். கொஞ்சம் திமிறிப் பார்த்த மேல்ஜாதி நேச ஒப்பந்தக்காரர்களை, ரிசர்வ் போலீஸுடன் வந்திருந்த கலெக்டர், இறுதியில் மிரட்டிப் பணிய வைத்தார். சாம, பேத, தானம் போய்விட்டால் அவர்கள் ‘தண்டத்திற்கு’ இருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்று சுருங்கக் கூறி விளங்க வைத்தார்.

எப்படியோ, தாசில்தார். அவருக்கு ‘அபிவியல் மச்சானான’ ஆர்.டி.ஓ. எஸ்.பி. டி.எஸ்.பி. ஆகியோர் புடைசூழ நின்ற கலெக்டர், படுத்துக்கிடந்த அருணாசலத்திற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த ‘ஆரெஞ்ச் ஜூஸை’ நீட்டினார். அருணாசலம், மடக்கென்று குடிக்கவும், மதகுகள் படக்கென்று திறக்கவும் சரியாக இருந்தது.