பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஒரு கோட்டுக்கு வெளியே ...


என்னைக் குத்தம் சொல்லக்கூடாது” என்றும் அவரை உஷார்ப்படுத்தினார்.

நடக்க முடியாத மாயாண்டியால், இப்போது எப்படித்தான் ஓட முடிந்ததோ? ‘கைதூக்கி’ விட்டு ‘கரையேற்றி’ விட்ட ஐவராஜாவைத் திரும்பிப் பார்க்காமலே, அப்படித் திரும்பிப் பார்த்தால், ஒரு நொடி வீணாகி விடலாம் என்பது போல், ஓட்டமும் நடையுமாக, உடம்பெல்லாம் ஆட, பூமி குலுங்க, பறவைகள் பயத்துடன் இறக்கைகளைச் சிலிர்த்துக்கொண்டு பறந்தோட, அவர் பாய்ந்தோடிக் கொண்டிருந்தார். நாலு திசையும் முட்ட, எட்டுக்கோணமும் தட்ட, தட்டுத்தடுமாறி, வழிபார்த்து ஓடாமல், கால்பட்ட இடத்தையெல்லாம் வழியாக நினைத்து, கண்பட்ட ஆட்களையெல்லாம் உண்மையிலேயே மனிதராக நினைத்து, அவர் ஓடினார். வேர்க்க விறுவிறுக்க உயிர் அவரைப் பிடித்திழுப்பது போலவும், உயிரை அவர் பிடித்திழுப்பது போலவும், கொலை செய்தவனைத் துரத்தும் போலீஸ்காரனைப்போல, அந்தப் போலீஸில் இருந்து தப்பித்து ஓடும் கொலைகாரனைப்போல, அவர் ஓடினார். அத்துவானக் காட்டில் நரிமுகங்களையும், பரிமுகங்களையும் பார்த்து அலுத்துப்போன ஒருவர், மனித முகத்தைப் பார்க்க ஏங்கிக்கிடந்த ஒருவர். அது கிடைக்காமல், இறுதியில் பார்த்த முகங்களையே மனித முகங்களாகப் பாவித்துக்கொண்டு. அவற்றைப் பார்க்கப் போகும் மனிதனைப் போல் தள்ளாடிக்கொண்டும் ஓடினார். தன்னையே தான் தள்ளிக்கொண்டும் ஓடினார். உலகம்மைக்கு இருமடங்காகவும் தனக்கு ஒரு மடங்காகவும் அந்த வயோதிகர் மும்மடங்காக ஓடினார்.

புளியந்தோப்பில், முன்பு உலகம்மையைச் சீண்டுவதை ஒரு கடமையாகவும், இப்போது அதை ஒரு இனிமையான பொழுதுபோக்காகவும் கொண்ட ராமசாமி, வெள்ளைச்சாமியிடம் அவர்கள் யாரென்று தெரிந்ததும் ஓடினார். அவர்கள் முன்னால் போய் நின்றுகொண்டு, “என் வீட்டு ஒரே வழியயும் ஐவராசா அடைக்கிறான். நீங்க சொன்னா கேப்பானாம். ஒரு வார்த்த வந்து சொல்லுங்க, சொல்லுங்க” என்று கெஞ்சினார். சாமிகள் இருவரும், அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று நினைத்தார்கள். அவர் நிர்வாணமாக இல்லாமலும், குறைந்தபட்சம் வேட்டியைக் கிழிக்காமலும், இருப்பதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். பிறகு ஐவராஜாவை உற்சாகப்படுத்த, ஒரே சமயத்தில் இருவரும் நினைத்து. தோட்டத்தைப் பார்த்து நடந்தார்கள்.