பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடை விரிந்திட...

165


மாயாண்டி நிற்கவில்லை. “சிரிக்கவாடா செய்யுறிக. ஒங்களப் பாத்து சொள்ளமாடன் சிரிக்கத மறந்துடாதிகடா” என்று சொல்லிக்கொண்டே, தலைதெறிக்க ஓடினார். புளியந்தோப்பில் இருந்து, தென்கிழக்கே உள்ள ஒரு தோட்டத்து வழியாக ஓடினார். விழுந்துபோன சோளத்தட்டைகளை நாலைந்தாகச் சேர்த்து, செங்குத்தாக வைத்துக் கட்டிக்கொண்டிருந்த ராமையாத் தேவரைப் பார்த்து, “தேவரய்யா, என் வீட்டு வாசப் பாதைய ஐவராசா அடச்சிக்கிட்டு இருக்கான். ஒம்ம மாதிரிப் பெரிய மனுஷன் வேண்டான்னா விட்டுடுவானாம். தயவு செஞ்சி வாரியரா?” என்று படபடப்பாகப் பேசிக்கொண்டு நின்றார். ராமையாத் தேவர், அவர் முகத்தையே பார்க்கவில்லை. தேவர் யோசிப்பதாக நினைத்த மாயாண்டி, “ஏல சோமு, தக்காளி வயலுக்கிட்ட எருமமாடு தெரியுது. ஓடிப்போயி விரட்டுல” என்று எங்கேயோ இருந்த ஒருவனுக்குச் சத்தம் கொடுப்பதை உணர்ந்த அவர், தேவர் தன்னைத்தான் ஒருவேளை எருமை மாடுன்னு சொல்கிறாரோ என்று நினைத்து, அங்கிருந்து ஓடினார்.

யூனியன் ரோடிற்கு அவர் வந்தபோது, இரண்டுபேர் ஒரு கட்டை வண்டியில் உட்கார்ந்திருக்க, ஒருவர். மாடுகளின் மூக்கணாங்கயிறுகளை லாவகமாக இழுத்துக்கொண்டே ‘இம்பா இம்பா’ என்று மாடுகளை விரட்டிக் கொண்டிருந்தார். முன்னால் போய் நின்ற மாயாண்டியைப் பார்த்ததும் ‘பிரேக்கான’ மூக்கணாங்கயிற்றை பிடித்திழுத்து மாடுகளை நிறுத்தினார் வண்டியோட்டி.

“மாட்லக்கண்ணு மச்சான், சிவசாமி கோனார. என் வீட்டு வழிய ஐவராசா அடைக்கான். அடைச்சிட்டாமுன்னா வெளிலயும் வரமுடியாது. உள்ளயும் போக முடியாதுய்யா. பெரிய மனசுபண்ணி கொஞ்சம் வந்து சொல்லுங்கய்யா. அவன் கேக்குறேங்குறான்.”

வண்டிக்காரர்கள் சிறிது யோசித்தார்கள். “இந்த புத்தி மொதல்லவே இருக்கணும். தும்ப விட்டுட்டு வாலப் பிடிச்சா எப்டி?” என்று சிவசாமிக் கோனார், ‘கீதோபதேசம்’ செய்ய, இன்னொருவர் “சரிசரி நகரும். ஒம்ம பாடு ஊருபாடு” என்று சொல்ல, வண்டியின் முன் பகுதியான ‘சட்டத்தில்’ உட்கார்ந்திருந்த வண்டியோட்டி, மாடுகளை சாட்டைக்கம்பால் விளாசினார். வண்டிச்சக்கரம் காலில் படாமல் இருப்பதற்காக, மாயாண்டி துள்ளிக்குதிக்க வேண்டியதாயிருந்தது.

மாயாண்டி, தலைவிரிகோலமாகி, ஊர்க்கிணற்றுப் பக்கமாக, காளியம்மன் கோவிலுக்கு முன்னால் வந்து, “காளியாத்தா, இன்னும் பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கியா?” என்று ஊரே அதிரும்படி