பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

ஒரு கோட்டுக்கு வெளியே ...


கதறிவிட்டு, திட்டில் உருளைக்கிழங்கு கருவாடு வகையறாக்களை விற்றுக்கொண்டிருந்த பகுதிநேர வியாபாரிகளிடம் விஷயத்தைச் சொல்லிக் கெஞ்சினார். அந்தப் பக்கமாகக் குடங்களை இடுப்பில் வைத்துக் குலுங்காமல் போய்க்கொண்டிருந்த பெண்களிடம் “ஒங்கவூட்டுக்காரங்கள வரச்சொல்லுங்கம்மா. ஐவராசா கிட்ட சொல்லச் சொல்லுங்கம்மா” என்று கெஞ்சினார். அந்தப் பெண்கள் பரிதாபப்பட்டார்களே தவிர, பதிலளிக்கவில்லை. வியாப்பாரிகள், தராசுத் தட்டுக்களைக் கொஞ்சம் விட்டுப்பிடித்தார்களே தவிர, விடையளிக்கவில்லை.

கிழவர், அதைரியப்படாமல், ‘வாலிபால்’காரர்களிடம் வந்தார். அவர்களிடமும் விஷயத்தைச்சொன்னார். அந்த ‘மைனர்கள்’ பந்தைப் பிடித்துக்கொண்டு சிறிது யோசித்துவிட்டு, பிறகு, ‘விவகாரம் பெரியவர்கள் சம்பந்தப்பட்டது’ என்று நினைத்துக்கொண்டு. எது அவர்களிடம் இல்லையோ அதையே ‘சர்வீஸ்’ போடுபவர் சொல்லிக்கொண்டு பந்தை அடித்தார்.

“லவ் ஆன். ஒன் லவ், லவ் ஒன்.”

கைப்பந்து அங்குமிங்குமாக உருண்டோடிக் கொண்டிருந்தது மாயாண்டியைப்போல. ஒரு கணம் திகைத்து. மறுகணம் ஊர்ப்பிரமுகர்கள், கூடித்தின்னும் காத்தமுத்துவின் டீக்கடைக்கு முன்னால் வந்து கத்தினார்:

“அய்யாமாருங்களே. தர்மப் பிரபுமாருங்களே! என்னோட வீட்டு வழிய ஐவராசா அடச்சிக்கிட்டு இருக்கான். நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன். ஒங்க காலுல வேணுமுன்னாலும் செருப்பா கிடக்கேன். தயவு செஞ்சி வாங்கய்யா. அவன அடைக்காண்டாமுன்னு சொல்லுங்கய்யா. நான் செஞ்சதுல்லாம் தப்புத்தாய்யா... நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்... தயவு செஞ்சி வாங்க! பழயதப் பாக்காம வாங்கய்யா! ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுய்யா! காளியாத்தா ஒங்க காலுகைய நல்லா வைப்பாயா! சொள்ளமாடன் சுகங்குடுப்பான்யா! வாங்கய்யா, வந்து கேளுங்கய்யா! தர்மப் பிரபுங்களே, ஒங்களத்தாய்யா.”

கூட்டத்தில் ஒரு குலுக்கல் ஏற்பட்டது; ஒரு அப்பாவியால் பொறுக்க் முடியவில்லை.