பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘பாவி’ இறந்திட...

177


என்று அனுமானித்துக் கொண்டாள். அப்படி நினைத்தபோது, அடக்க முடியாத ஆவேசம் ஏற்பட்டது. அந்த ஆவேச சக்தி, சிறிது நேரத்திற்குப் பிறகு, வெடிக்க விரும்பாத அணுசக்தியாக ஐக்கியமாகியது.

உலகம்மை தலையைச் சுருட்டிக் கட்டிக்கொண்டாள். ஊரில் சொல்லலாமா? வேண்டாம்; ஏற்கனவே அவர்களுக்கு நடைப்பிணமாகத் தெரிந்த அய்யா, இப்போது வெறும் பிணம். ‘ஐவராசாவுடைய குரல்வளைய நெரிக்கலாமா? வேண்டாம். இவன், அவ்வளவு சீக்கிரமாய்ச் சாவக்கூடாது. கை அழுவி, கால் அழுவி, உடம்பு முழுதும் கொஞ்சங் கொஞ்சமாக அழுவிச் சாவணும் சேரி ஜனங்களிடம் சொல்லலாமா? இன்னைக்கு வேண்டாம். சொன்னா இப்பவே அய்யாவைத் தூக்கிடுவாங்க.’ அய்யாவை இப்பவே அனுப்ப அவளுக்கு இஷ்டமில்லை. இரவு முழுவதும் அவரை வைத்திருந்து பார்க்க வேண்டும். இருபது வயது வரை. தாய்க்கோழி போல இறக்கைக்குள் வைத்துக் காத்த அந்த அய்யாவை – அந்த அம்மாவை – அந்த சிநேகிதனை – அந்தத் தெய்வத்தை – இன்று ஒரு இரவு முழுவதுமாவது பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அவள் மட்டுந்தான் அவருக்கு மகள். இந்த இரவு வேளையில், அவள் மட்டுமே அவரோடு இருக்க வேண்டும்.

உலகம்மை. அய்யாவையே பார்த்துக்கொண்டு நின்றாள். பின்பு காலில் தலையை வைத்துச் சாய்ந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தக் கட்டிலில் அவளும் படுத்துக்கொண்டு. அய்யாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கண் மூடினாள். அவர் நெஞ்சைக் கண்ணீரால் குளிப்பாட்டினாள். பிறகு திடீரென்று எழுந்து கட்டிலின் முனையில் உட்கார்ந்து கொண்டு, அவர் தலையைத் தன் மடியில் வைத்தாள். பிறகு மீண்டும் எழுந்து, அவரை விட முடியாதவள் போல், அவர் கைகளோடு தன் கைகளை இணைத்துக் கொண்டாள். அவரை விட்டுத்தான் ஆக வேண்டும் என்பதுபோல், சிறிது விலகி நின்று பார்த்தாள். பிறகு அடியற்ற மரம்போல் அவர்மேல் விழுந்தாள். விழுந்தவள் எழுந்து, அய்யாவின் கன்னங்களுக்கு முத்தங் கொடுத்தாள். பிறகு மூலையில் போய் சாய்ந்தாள். அரைமணி நேரத்திற்குப் பிறகு, அய்யாவை வந்து கட்டிப் பிடித்தாள். அவர் காலை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டாள்.

அதற்குள் இரவு முடிந்து, பொழுது புலர்ந்து விட்டது.