பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. அய்யாவைச் சுமந்து...

புள்ளினங்கள் ஆர்த்தெழுந்து, மாடு கனைத்து. மனித நடமாட்டம் துவங்கிய வேளையிலே, மீதமின்றி எடுக்காமல், மீதியென்று வைக்காமல், சரியாக வராமல், சமத்துவத்தையும் மறக்காமல், தன்னை நினைப்போர்க்கும் தன்னை நினைவூட்டி, கனியாய் இருப்பதைப் புவி ஈர்ப்பால் இழுத்தும். காயாய் இருப்பதைக் காற்றால் முடித்தும் தனக்கென்றும் சாவில்லாத மரணதேவனின் மடியில் துயில்கொண்ட மாயாண்டியின் வாய் இன்னும் சிரித்துக்கொண்டே இருந்தது.

இப்போது, அய்யாவைப் பயபக்தியோடு பார்த்துக் கும்பிட்டுக் கொண்டாள் உலகம்மை. பானையில் இருந்த நீரை எடுத்து, வீட்டுக்குள்ளேயே முகத்தை அலம்பிவிட்டு. முந்தானிச் சேலையை முக்காடாகப் போட்டுக்கொண்டு. ஊருக்குள் நுழைந்தாள். கிராம முன்சீப்பைப் பார்த்து விட்டு, சேரியில் போய் சேதி சொல்லிவிட்டு. வருவதற்காகப் புறப்பட்டாள். நேராக முன்சீப் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

வாசல் பக்கத்துத் திண்ணையில் உட்கார்ந்து. ஏதோ ஒரு நோட்டுப் புத்தகத்தையோ அல்லது நமூனாவையோ கண்களால் குடைந்து கொண்டிருந்த தலையாளி. அவளைப் பார்த்ததும், குறுக்கை நிமிர்த்தியதோடு, “இங்க எதுக்கு வந்த?” என்று எரிந்து விழுந்தார். உலகம்மை, சாவகாசமாக, ஆவேசத்தை அடக்கி வைத்த நிதானத்துடன், கேட்டாள்:

“யோவ் தலயாரி, முன்சீப்ப வரச் சொல்லுய்யா!”

தலையாரி, எழுந்தே விட்டார். ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும், சில சமயம் முன்சீப்பையும் ‘எசமான்’ என்று அழைக்கும் ஜனங்கள். தன்னையும் அப்படி அழைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பவர் அவர். இருந்தாலும், இவளைப்போல் யாரும் அவரை. இதுவரை ‘தலையாரி’ என்று அழைத்ததில்லை - அதுவும் ‘யோவ்’ என்ற அடைமொழியுடன். அவருக்குக் கோபம் வார்த்தைகளாக வடிவெடுத்தது.

“நீ ஒன்னப்பத்தி என்னதான் நினைச்சிக்கிட்ட நான் யார்னு தெரியுமா?"