பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

ஒரு கோட்டுக்கு வெளியே ...



“ஒனக்கு பைத்தியம் பிடிச்சிட்டா கிராம முன்ப்ேபுன்னா ஒன் வீட்டுக் கிள்ளுக்கீரையா?”

உலகம்மை சளைக்காமல் பதில் சொன்னாள்:

“அப்டி நினைச்சா நான் வரவே மாட்டனே!”

“எதுக்காவ வந்த சட்டுப்புட்டுன்னு விஷயத்தச் சொல்லு.”

“எங்க அய்யா செத்துப் போயிட்டாரு. சொல்லிவிட்டுப் போவ வந்தேன்.”

கூடி நின்றவர்களும், முன்சீப்பும் திடுக்கிட்டார்கள். பாழாப்போற இந்த முண்டையால அந்த மனுஷன் கட்டயப் போட்டுட்டான். பிள்ள குலமழிச்சா பெத்தவன் என்ன செய்வான்? எல்லாம் இவளால, இவளால!’

முன்சீப் கடுமையாகக் கேட்டார். ‘எப்படிச் செத்தார்?’ என்று சகஜ பாவத்துடன் வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு, அதட்டிக்கொண்டு கேட்டார்:

“அப்பன் செத்தா என்கிட்ட எதுக்கு வந்த ஊரே தள்ளி வச்சிருக்கயில என்கிட்ட எதுக்காவ வந்த நான் என்ன வெட்டியானா?”

உலகம்மை, அவரைப் புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு, பேசினாள்:

“ஒம்ம வெறும் குட்டாம்பட்டிக்காரரா நெனச்சி வரலய்யா. நீரு இந்த ஊருக்கு முன்ப்ேபு சர்க்கார்ல சம்பளம் வாங்குற வேலக்காரன்! நாங்க ஏவுற வேலயச் செய்யுறதுக்கு இருக்கிற உத்தியோகஸ்தன் கிராமத்துல நடக்கிற நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாயி மாதுரி இருக்கவேண்டிய சர்க்கார் ஆளு. அதுக்காவத்தான் இங்க வந்தேன்! எங்கய்யா செத்துப்போயிட்டாரு! நாளக்கி மாரிமுத்தோ, பலவேசமோ நான்தான் எங்கய்யாவ அடிச்சிக் கொன்னுட்டேன்னு போலீஸ்லகூடச் சொல்லலாம்! அதனால் நீரு வந்து பாத்து சந்தேகத்தப் போக்கணும்! அதுக்காவத்தான் வந்தேன்.”

முன்சீப்பின் மீசை, அறுந்து விழப்போவதுபோல் துடித்தது. உலகம்மை சொல்வது உண்மையாக இருந்ததால், அவரால் கோபப்படாமலும், கோபமாகப் பேசாமலும் இருக்க முடியவில்லை.