பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவைச் சுமந்து...

181



“என்னமோ சொன்னான் ‘எலி ரவிக்க கேட்குதாம் சபையில’ என்கிற மாதிரி, அப்பனப் பறிகொடுத்தாலும், ஒன் திமிரு அடங்கல! நான் வரமுடியாது ஒன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க. ஊரு ஒன்னத் தள்ளி வச்சது மாதிரி என்னயும் தள்ளி வைக்கணுமா என்ன? போ போ.”

முன்சீப் உள்ளே போகப் போனார். உலகம்மை, விடுவிடென்று விட்டாள்:

“போனுமுன்னா போம்! அதுக்குள்ள, நான் சொல்றத கேட்டுட்டுப் போம். நீரு சர்க்கார் உத்தியோகஸ்தர். மாரிமுத்துவோட பெரிய்யா மவனுல்ல! நான் ஊர்ல தள்ளி வச்ச உலகம்மைல்ல! வரி கட்டுற பொம்பள ஒமக்குத் தள்ளிவச்ச விவகாரத்துல சம்பந்தப்பட அதிகாரம் கெடயாது. இன்னுஞ் சொன்னா அதத் தீர்த்து வச்சிருக்கணும்! போவட்டும். தள்ளி வச்ச ஊருகூட நீரு சேருறதா இருந்தா, போம்! ஆனால் உத்தியோகத்துல இருந்து ஒம்மத் தள்ளி வைக்கத பாராம தூங்கமாட்டேன்! இது சத்தியமான வார்த்த நேரா அருணாசலத்தோட கலெக்டர்கிட்ட போவப் போறேன்! அப்புறம் வருத்தப்படக்கூடாது என்ன சொல்றீரு? ஒம்மோட கடமயத்தான் நான் செய்யச் சொல்றேன்! என்ன சொல்றீர்? முன்சீப் அய்யா, வாரீரா போவலாம்!”

முன்சீ்ப்பால் எதுவும் சொல்ல முடியவில்லை. வாசலில் மிதித்த காலை உள்ளேயும் கொண்டுபோக முடியவில்லை; வெளியேயும் இழுக்க முடியவில்லை. ‘அருணாசலப்பயலோட இந்த மூளி சேந்துக்கிட்டு ஒண்னு கிடக்க ஒண்ணு பண்ணிட்டா, உத்தியோகம் போயிட்டா, நாயிகூட திரும்பிப் பாக்காது. என்ன பண்ணலாம்’

உலகம்மை சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு “சரி ஒம்மிஷ்டம். இன்னும் கால்மணி நேரம் வர பாப்பேன்! அதுக்குள்ள வரலன்னா வருத்தப்படக் கூடாது” என்று சொல்லிக்கொண்டே. நிதானமாகத் திரும்பி வேகமாக நடந்தாள். உணர்ச்சி வேகத்தில், சேரிப்பக்கம் போகவில்லை. அதோடு முன்சீப் வரும்போது, அருணாசலம் வந்தால் கைகலப்பே ஏற்படலாம் என்று அவள் நினைத்ததும் ஒரு காரணம். வீட்டிற்கு வந்து, அய்யாவின் வேட்டியைச் சரிப்படுத்தினாள். வெளியே போய். இரண்டு மூன்று தங்கரளிப் பூக்களைப் பறித்துக்கொண்டு வந்து, அய்யாவின் நெஞ்சில் வைத்துவிட்டு, பின்னர் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, முட்டுக்