பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவைச் சுமந்து...

183


உலகம்மை உட்கார்ந்து கொண்டே பதில் சொன்னாள்:

“நான் சாயங்காலம் வந்து பாத்தா செத்துக்கிடந்தார். அவரு சாவும்போது பக்கத்துல இருக்கமுடியாத பாவியாயிட்டேன்! எதுக்கும் ஐவராசாவ கேட்டுப்பாருங்க. அவரு, ஒருவேள மாரிமுத்து நாடாரக் கேக்கச் சொல்லுவாரு.”

நெடிய மவுனம். பயங்கரமான சத்தத்தையும் உறைய வைக்கும் அசுரத்தனமான மெளனம். இறுதியில் தலைவர்கள் மூவரும், தங்களுக்குள் முனங்கிக்கொண்டார்கள். உலகம்மை வெடித்தாள்:

“அய்யா செத்ததுல திருப்திதான சந்தேகம் இருந்தா தென்காசி ஆஸ்பத்திரில வேணுமுன்னாலும் அவர அறுத்துப் பாத்து சந்தேகத்த அரிஞ்சுக்கிடுங்க. எனக்குச் சம்மதந்தான். உயிரோட இருக்கையிலேயே அறுத்திங்க இனுமே செத்த பிறகும் அறுக்கதுல கவலயில்ல!”

கணக்கப்பிள்ளையால் கையைக் கட்டிக்கொண்டோ, வாயைக் கட்டிக்கொண்டோ இருக்க முடியவில்லை.

“என்ன பொண்ணு அகராதி பிடிச்சிப் பேசுற நாங்களும் மனுஷங்கதான்.”

“ஓ நீங்க மனுஷங்கதான்” என்று உதட்டைப் பிதுக்கினாள் உலகம்மை.

இதற்குள், “பொம்புளகிட்ட என்ன பேச்சி? பிணத்த அப்புறப்படுத்துற வேலயப் பாக்காம?” என்று பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிக்கொண்டே வெளியே போனார். அவரைத் தொடர்ந்து மற்ற இருவரும் வெளியே வந்தார்கள்.

தலைவர்களின் சமிக்ஞைக்குக் காத்துக்கிடந்த கூட்டத்தினர், பஞ்சாயத்துத் தலைவர், “பிணத்தைத் துக்க வாங்க"ன்னு சத்தம் போட்டுச் சொன்னதும், திபுதிபென்று ஓடிவந்தார்கள். உலகம்மை, வீட்டுக்குள் நுழையப்போனார்கள். மூலையில் சாய்ந்திருந்த உலகம்மை, முயல்குட்டி போல் துள்ளிக்கொண்டு எழுந்து, வாசலை மறித்துக்கொண்டு நின்றாள்.

“யாரும் என் வாசலுக்குள்ள நுழயக்கூடாது! நீங்க என்னிக்கி எங்களத் தள்ளி வச்சியளோ, அன்னிக்கே ஒங்கள நான் தள்ளி வச்சிட்டேன்! எங்கய்யா உயிரோட இருக்கையில தொடாதவங்க இப்ப எதுக்குத் தொடணும்? யாரும் தொடப்படாது. கொலைகாரங்களே