பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவைச் சுமந்து...

185


ராமநாதன் செட்டியாரையும், பீடி ஏஜண்ட்ராமசாமியையும், கூட்டத்தில் பார்த்த அவளிடம் அடங்கிக்கிடந்த அணுசக்தி ஆவேச சக்தியாகியது. அய்யாவை மயானத்திற்கு எப்படித் தூக்கிக்கொண்டு போகலாம் என்று சிறிது யோசித்தாள். மல்லாந்து கிடக்கும் கட்டிலில், மல்லாந்து கிடக்கும் அய்யாவை, உயிரற்ற அந்தச் சடலத்தை அப்படியே அந்த உயிருள்ள சடலத்தால் தூக்க முடியாதுதான்.

உலகம்மையோசித்தாள். ஒரே நொடியில் விடைகிடைத்தது. விடை கிடைத்த வேகத்தில், தோண்டிப்பட்டைக் கயிற்றை, நாலைந்து துண்டுகளாக, இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து நறுக்கினாள். அய்யாவின் பிடரியில் ஒரு கையையும், கால்களுக்குள் ஒரு கையையும் அணையாகக் கொடுத்து. அவரைத்துக்கித் தரையில் வைத்தாள். பிறகு, கட்டிலை பக்கவாட்டில் சாய்த்தாள். பிறகு யோசித்துவிட்டு, மீண்டும் ‘மல்லாக்க’ப் போட்டாள். சடலத்தை, குழந்தையைத் துக்குவது மாதிரி கட்டிலின் மத்திய இடத்தில் வைத்தாள். பின்னர் இரு கைகளையும், இரண்டு கட்டில் கால்களில் வைத்துக் கட்டினாள். கால்கள் இரண்டையும், ஒன்றோடொன்றாகச் சேர்த்துக் கட்டி, பின்பு அதைக் கட்டில் சட்டத்தில் கட்டினாள். கழுத்தைச் சுற்றிக் கயிற்றைப்போட்டு, அந்தக் கயிற்றை, கட்டிலின் கயிற்று வலைகளுக்கிடையே ‘கண்கண்ணாக’ இருந்த ஒரு ஓட்டைக்குள் விட்டு, பின்னர் அந்தக் கட்டிலின் மேல் சட்டத்திற்குக் கொண்டுவந்து கட்டினாள். இதேபோல் இடுப்பைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி, அதைக் கீழே இருக்கும் சட்டத்தோடும், மார்பைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி, அதை மேலே இருக்கும் சட்டத்தோடும் பின்னினாள். கயிறு போதவில்லை. ‘உறிக்கயிற்றை அறுத்து, அதை இரண்டு துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டையும் வலது தோளுக்கும் இடது காலுக்கும் – இடது தோளுக்கும் வலது காலுக்கும் குறுக்காகப் போட்டு, அவற்றைக் கட்டிலின் பின்புறமாகக் கொண்டு வந்து, சட்டங்களில் நாலைந்து தடவை சுற்றிக் கட்டினாள். பின்னர், கட்டிலை பக்கவாட்டில் சாய்த்து, மேல் சட்டத்தை வலது கைக்குள் வைத்துத் தூக்கிக்கொண்டு வாசலுக்கு வெளியே வந்தாள். மாயாண்டி, சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் மாதிரி காட்சியளித்தார்.

வெளியே வந்ததும், கூட்டத்தை ஒருதடவை இளக்காரமாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கட்டில் சட்டத்தின் மத்தியப் பகுதியை, ஒரடி இடைவெளியில் இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கி, முதுகில் சாய்வாக வைத்துக்கொண்டு நடந்தாள். முதுகுப் பக்கம் ‘தொட்டிலைக்’ கட்டி அதில் குழந்தையை வைத்துச் செல்லும் மலைஜாதிப்

கோ.13.