பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பெண்போல், அய்யாவைக் கட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்டிலை, அனாவசியமாகவும், அலட்சியமாகவும் தூக்கிக்கொண்டு போனாள்.

கூட்டத்திற்கு என்னவோ போலிருந்தது. இறந்துபோன அய்யாவையும், இறக்காமல் இருக்கும் மாமியாரையும் நினைத்து ஒப்பாரி வைக்கத் தயாராக இருந்த ஒருசில பெண்கள். தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்கள். சில பெண்கள், உண்மையிலேயே கலங்கிப் போயிருந்தார்கள். இன்னும் சில பெண்கள். குறிப்பாகப் பிராந்தனை, அவள் சார்பில் அடிக்கப்போன சக கூலிக்காரிகள், வாய்விட்டே அழுதார்கள். உலகம்மையின் மாஜி பீடிக்கடை தோழிகள்கூட கண்களைத் துடைத்துக்கொண்டு, கழுவாய் தேடினார்கள். சரோஜாகூட அங்கே இருப்பதுபோல் தெரிந்தது.

பெண்கள் கூட்டம் இப்படி என்றால், ஆண்கள் கூட்டமும் அப்படித்தான். ஒவ்வொருவரும், குறிப்பாகப் பஞ்சாட்சர ஆசாரி, ஐவராஜா, ராமையாத் தேவர் முதலியோர், பின்னால் இருத்திக் கட்டப்பட்ட சடலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள். மிரட்டும் கண்களோடு, லேசாகச் சிரித்துக்கொண்டிருப்பதுபோல், இருந்த மாயாண்டி, அவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுப்பார்ப்பது போல் தெரிந்தது. இரு இரு ஒன்னக் கவனிச்சுக்கிறேன்' என்று ஒவ்வொருவரையும் அவர் சொல்லாமல் சொல்வதுபோல், ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டார்கள். இதற்குள், கூட்டத்தில் இருந்த ஐவராஜா மயக்கம் போட்டு விழுந்ததால், அவருக்குத் துண்டை எடுத்து ஒருவர் வீசிக்கொண்டிருந்தார்.

இந்த அமளிக்குள்ளும் அல்லது அமளியில்லாத அந்த நிசப்தத்திலும் பலவேசம். "பொம்புளக்கி இவ்ளவு பிடிவாதம் ஆவாது சொல்றதக் கேக்காமப்போனா எப்டி? இவ்ளவு வீம்பு பிடிக்கவா ஊர்ச் சுடுகாட்டுலயும் பொணத்த அடக்கம் பண்ணப்படாது என்று இரைந்து பேசினார். யாரும், அவர் பேசியதை ஒட்டியோ வெட்டியோ பேசவில்லை.

உலகம்மை, மௌனமாக நடந்து போனாள். கண்ணீர் சிந்தாமல் நடந்தாள். “என் மவா நடந்துபோற தூசியில அறுந்து போற தூசிக்குப் பெறுவியளாடான்னு' அய்யா சொன்னதாக மலேயாக்காரர் சொன்னதை நினைத்துக்கொண்டு. கூட்டத்தைத் தூசியாகக் கருதிக்கொண்டு சென்றாள். அத்தனை வேதனையிலும், மலேயாக்காரர் இருக்கிறாரா என்று பார்த்தாள். அந்த யோக்கியனும் இல்லை. மாரிமுத்து நாடாரும் அங்கே இல்லை. பெற்றவனைக் குழந்தையாக்கி,