பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவைச் சுமந்து...

187


அந்தக் குழந்தை, பெற்றவளைப்போல் நடந்தது. தொட்டிலில் போட்டு கண்குளிரப் பார்த்தவனை, கட்டிலில் கட்டி, அவள் நடந்தாள். தூக்கி வைத்துச் சிரித்தவனைத் தூக்கிக்கொண்டு. அவள் துக்கத்தையும் சுமந்துகொண்டு போனாள். ஊரார் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றனர். சில பெண்கள் சத்தம் போட்டே அழுதார்கள். “உலகம்மா! ஒனக்கா இந்தக் கதி?” என்று கதிகலங்கிப்போய் கதறினார்கள். உலகம்மை யாரையும் பார்க்காமல், எதையும் நோக்காமல், பற்றற்று துறவிபோல், பளுதாங்கிய முதுகைக் காட்டிக்கொண்டே நடந்தாள். அய்யாவின் கனத்தைவிட, நெஞ்சின் கனமே அதிகமாக இருந்தது.

அவள், வெகுதூரம் நடந்திருக்க மாட்டாள். ஒரு புளிய மரத்திற்கருகே நின்ற சேரிக்கூட்டம் ஓடிவந்தது. இதற்கு மேல் போனால் கைகலப்பு வரும் என்று நினைத்துப் புளியமரத்தை ‘எல்லைப் போஸ்டாக நினைத்துக்கொண்டு அங்கே நின்ற சேரி ஜனங்கள், அவளை நோக்கி ஓடிவந்தார்கள். “ஏம்மா, நாங்கெல்லாம் ஒங்கய்யாவோட ஒய்யாவா செத்துட்டோமுன்னா நினைச்சிக” என்று சொல்லி, கட்டிலை வாங்கி கயிறுகளை அவிழ்த்து, பிணத்தைக் கட்டிலில் மல்லாந்து படுக்கப் போட்டு, நான்குபேர் தூக்கினார்கள். பெண்கள், ஒலகம்மையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “ஓசியில பனவோல தந்த மகராசா, ஒனக்கா இந்தக் கதி?” என்று புலம்பிக்கொண்டே போனார்கள். அருணாசலம் அங்கே வரவில்லை. அவன் வந்தால் விபரீதம் ஏற்படலாம் என்று அஞ்சிய பெரியவர்கள், அவனை வீட்டிலேயே பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தார்கள்.

மாயாண்டி நாடார் அருணாசலத்தின் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டார். நான்கு மூங்கில் கழிகளை, நேர்க்கோடுகள் போல் போட்டு, பத்துப்பதினைந்து வாதமடக்கிக் கம்புகளைக் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டுக் கட்டினார்கள். அதற்கு மேல் தென்னை ஒலைகள் போடப்பட்டன. ஒலைகளுக்குமேல் அப்போதுதான் முனையப்பட்ட ஒலைப்பாய் விரிக்கப்பட்டது. மாயாண்டிக்குப் புதுவேட்டி கட்டப்பட்டது. கண்ணை மறைக்க சந்தனம் அரைத்து அப்பப்பட்டது. இதற்குள் கோணச்சத்திரம் போய், ஒருவன் வாங்கிவந்த ரோஜாப்பூ மாலை சடலத்திற்குப் போடப்பட்டது. சடலத்தை, பாடையில் வைத்து, மேல் ஜாதிக்காரர்களின் மயானத்தைப் பார்த்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். மையற்ற பேனாப்போல் உணர்வின்றி நடந்து கொண்டிருந்த உலகம்மை, அய்யாவை, ஹரிஜனங்களுக்கென்று தனியாக உள்ள சுடுகாட்டில், மனிதன் செத்தபிறகும் சாதி சாவாது