பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஒரு கோட்டுக்கு வெளியே ...


உலகம்மை தயங்கிக் கொண்டே கிணற்றுக்குள் இறங்கினாள். சேலையை அவிழ்த்து, மார்பு வரை கட்டிக்கொண்டு, ‘மூலப்படியில்’ உட்கார்ந்து கொண்டாள். தண்ணீர் இடுப்பு வரைக்கும் வந்தது. இரண்டு கைகளால் தண்ணீரை ஊற்றிக் கொண்டாள். குத்துக்காலைப் பிடித்துக்கொண்டு நின்ற மாரிமுத்து நாடார், அந்த பத்தொன்பது வயது மங்கையின் சிவந்த மேனியின் அழகைத் தற்செயலாகப் பார்த்து, லேசாகச் சலனப்பட்டார். அங்கேயே நிற்கலாமா வேண்டாமா என்பது போல், தலையைச் சொறிந்தார். பிறகு ‘நம்ம வயசுக்குத் தகாது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, உடம்போடு ஒட்டியிருந்த புடவையையும், அந்த ஈரத்துணிக்குள் எட்டிப் பார்த்த உடல் அழகையும் கண்களால் விளக்கிக் கொண்டே ‘கமலக்கிடங்கு’ பக்கமாகப் போனார்.

மாரிமுத்து நாடார் அகன்றுவிட்டதை ஓரக்கண்ணால் பார்த்த உலகம்மை, கிணற்றுக்குள் பாய்ந்தாள். மூக்கைப் பிடித்துக்கொண்டு ‘முங்கினாள்’. பின்னர் மூக்கில் இருந்த கையை எடுத்து, இரண்டு கைகளாலும், தண்ணீரை மேல்நோக்கித் தள்ளிக்கொண்டு, அவள் கீழ்நோக்கிப் போனாள். கைகளிரண்டால் தலையைக் கோதிவிட்டாள். கால்கள் இரண்டையும் தண்ணீருக்குள் மேலும் கீழுமாக உதைத்துக்கொண்டு, கைகளிரண்டையும் தண்ணீருக்குள் கீழ்நோக்கி அழுத்திக்கொண்டே உடம்பு முழுவதையும் தேய்த்து விட்டாள். மாரிமுத்து நாடார் பிராந்தனை அதட்டுவது அவளுக்குக் கேட்டது.

“சீக்கிரமா ஆவட்டும். இன்னுமா குளிக்க? ஏல, வெள்ளச்சாமி! இங்க யாமுல வார? பொம்பிள குளிக்கிற இடத்துல ஆம்பிளக்கி என்னல வேலை? அங்கேய நில்லுல படவாப் பயல.”

உலகம்மை நெற்றியில் விழுந்த முடிகளைப் பின்புறமாக விலக்கிக் கொண்டு, மூலப்படிக்கு வந்து, சேலையின் ஒரு நுனியைப் பிழிந்து, கசக்கிவிட்டு, பிறகு அதைக் கட்டிக் கொண்டே, இன்னொரு முனையை அலசிக்கொண்டிருந்தபோது, மாரிமுத்து நாடார் எட்டிப் பார்த்தார். அவளுக்கு வெட்கமாக இருந்தது.

“இன்னுமா முடியல சீக்கிரம்...”

“நீரு போம் மாமா. நான் பின்னாலயே வாரேன்.”

“நீ எனக்குச் சொல்லித் தாரியோ. நான் போயிட்டா, நீ வாரத்துக்குள்ளே ராகுகாலம் வந்துடும். உம் சீக்கிரம். அழுக்குத் தீர குளிச்சியளும் இல்ல. ஆச தீர...”