பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

ஒரு கோட்டுக்கு வெளியே ...



எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதுபோல், அதை அங்குமிங்குமாக ஆட்டிப்பார்த்துவிட்டு, பிறகு அதையும் உள்ளே போட்டுச் 'சாக்கைக்' கட்டினாள்.

பானை சட்டி.களை எடுக்கவில்லை . 'உலமடியில்' இருந்த காகிதத்தை எடுத்தாள். லோகு. தன் கைப்பட எழுதிக்கொடுத்த முகவரி அது. அதைக் கிழிக்கலாமா என்று யோசித்தாள். பிறகு எடுத்ததை, இடுப்பில் செருகிக் கொண்டாள். ஒரு சட்டிக்குள் இருந்த இரண்டு ரூபாய் சில்லறைக் காசுகளை எடுத்து. முந்தானிச்சேலையில் முடிந்து கொண்டாள். கொடியில் தொங்கிய அய்யாவின் வேட்டியையும், துணியையும். தன் பழைய சேலையையும் எடுத்துச் சுருட்டிக்கொண்டு, கோணிப்பையை அவிழ்த்து, அதற்குள் திணித்துவிட்டு, பிறகு மீண்டும் அதைக் கட்டினாள்.

ஓலைப்பாயை, அங்கேயே விட்டுவிட்டாள். வாசல் கதவையும், 'நிலப்படியையும்' பெயர்க்கலாமா என்று நினைத்தாள். மூங்கில் கழிகளால் ஆன தட்டிக்கதவுதான் அது. ஆனால், 'சுண்டாக்காய் கால்பணம்; சுமக்கூலி முக்கால் பணம்' என்ற பழமொழியை ஞாபகப்படுத்திக் கொண்டு விட்டுவிட்டாள்.

செப்புக்குடத்தையும், கோணிப்பையையும், தூக்கப் போன வள் அப்படியே அசந்துப் போய் நின்றாள். அய்யா, இருந்து - இறந்த அந்த இடத்தைக் கண்கொட்டாது பார்த்தாள். அவள் பிறந்த இடமும் அதுதான். எத்தனை ஆண்டுக் காலமாக இருந்த வீடு அது! அய்யாவும் - அம்மாவும் கூடிக்குலவி வாழ்க்கை செய்த திருத்தலம் அது! உலகம்மைக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் ஈரக்கசிவு நிற்கும் வரை அழுதுகொண்டே இருந்த அவள், அய்யா உட்கார்ந்து சாப்பிடும் இடத்தையும், கட்டில் இருந்த இடத்தையும் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாள். அந்த வீட்டைவிட்டுப் பிரிவது என்னவோ போலிருந்தது. அங்கேயே இருந்துவிடலாமா என்றுகூட நினைத்தாள்.