பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகம்மை நடந்தாள்...

195


வீட்டுக்கு வெளியே சத்தங்கேட்டு எட்டிப் பார்த்தாள். மாரிமுத்து நாடார். கணக்கப்பிள்ளை உட்பட, ஒரு பெருங் கூட்டம் அவள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. ‘எதுக்காக வாரானுக?’ என்று நினைத்த உலகம்மை சிறிது பயந்து விட்டாள். கூட்டத்தில் மாரிமுத்து பலவேச நாடார்களையும், பஞ்சாட்சர ஆச்சாரியையும், தற்செயலாகப் பார்த்த அவள் முகம் இறுகியது. அவர்கள் முன்னால் அழுவது இருக்கட்டும். அழுததாகக்கூடக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவளாய், கண்களை முந்தானியால் துடைத்துக் கொண்டாள். செப்புக்குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, கோணிப்பையையும், அதனருகே இருந்த மண்வெட்டியையும் ஒருசேரப் பிடித்துத் தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.

வழிமறித்து நிற்பதுபோல் நின்ற கூட்டத்தைவிட்டு விலகிப் போக முயற்சி செய்தாள்.

ஏற்கனவே சேரி மேளத்தைக் கேட்டு ஆடிப் போயிருந்த ஊர்க்காரர்கள் அங்கே வந்து நின்றார்கள். உலகம்மை, வீட்டுச் சாமான்களை எடுப்பதற்காக வந்திருப்பதைப் பண்ணையாள் சின்னான் மூலம் கேள்விப்பட ஊர்ஜனங்கள் ஒன்று திரண்டு வந்தார்கள். காத்தமுத்து டீக்கடையில், இப்போது சின்னாள் மட்டுந்தான் (கீழே) உட்கார்ந்திருந்தான். காத்தமுத்துவே இங்கு வந்து விட்டான்.

போகப்போன உலகம்மையைப் பார்த்த கூட்டம், அவள் தூரத்து உறவினரும், அவளுக்காக ஒரு காலத்தில் வக்காலத்துப் பேசி உதைபடப் போனவருமான கருவாட்டு வியாபாரி நாராயணசாமியை, முன்னால் தள்ளிவிட்டது. அவர் லேசாக இருமிக்கொண்டு. உலகம்மையின் பார்வை கிட்டியதும் பேசினார்:

“ஒலகம்மா. நீ செய்யுறது உனக்கே நல்லாயிருக்கா?”

“எது சின்னையா?”