பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"கணக்கப்பிள்ள, என் ஜாதியப் பத்திக் கவலப் படாண்டாம். நான் இப்போ பறச்சிதான். அப்படி ஆனதுனால சந்தோஷம் இல்லாம போவல. நான் ஒருத்தி போறதால மேல்ஜாதி எல்லாம் போயிடுமுன்னா, ஒங்க சாதிங்க எவ்வளவு இத்துப்போயிருக்கணும்? மொதல்ல அதக் கவனிங்க."

கணக்கப்பிள்ளைக்குக் கோபந்தாங்கமுடியவில்லை. "இது ஊராய்யா, இது ஊராய்யா?" என்று சொல்லிக்கொண்டே 'வாக்கவுட் செய்தார். இப்போது, அவர் 'அவுட்டானதை' யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதி முயற்சி போல், தட்டாசாரி பஞ்சாட்சரம் பரபரப்போடு பேசினார்.

"ஒனக்கு இந்த ஊர்ல இருக்கப் பிடிக்காட்டா வேற எங்கேயாவது போயிடு! ஊர்ல அஞ்சிபத்துன்னு தலைக்குக் கொஞ்சமா வேணுமுன்னாலும் ரூபா வசூலிச்சித் தாரோம். கண்காணாத சீமையிலே போயி, கையோடே காலோட பிழச்சிக்க! அத விட்டுப்புட்டு காலனில போயி இருக்கது நல்லா இல்ல. ஊரக் கேவலப்படுத்துறது சாமிக்கே பொறுக்காது! ஊர் மானத்த விக்கப்படாது. பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரு ஆவாது."

"ஏன் ஆசாரி துடிக்கியரு? சப் இன்ஸ்பெக்டர வச்சிக்கிட்டு இருந்த ஒரு தேவடியா முண்ட ஊரைவிட்டுப் போறதுனால ஊரு துப்புரவாயிடும்! நீரு சந்தோஷப்படாம சடச்சிக்கிடுறீரே!"

உலகம்மை, சற்று வேகமாக நடக்கத் துவங்கினாள். மேல் ஜாதிகளின் மானத்தைக் காப்பதற்காக, ஒவ்வொருவரும் தத்தம் தன்மானத்தை இழக்கத் தயாராக இருப்பது போல், உலகம்மையைப் பார்த்துக் கண்களால் கெஞ்சினார்கள். எதிர்காலத்தில் வேறு ஒரு பட்டியுடன் சண்டைக்குப் போக வேண்டிய நிலைமை வந்தால், 'ஒங்க ஊரு சங்கதி தெரியாதா?" என்று உலகம்மையின் சேரிச் சங்கதியைக் கோடிட்டுக் காட்டுவதுபோல் காட்டினால், சொல்லுபவர்களின் பல்லை