பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் வயல் நட்டு...

11


மாரிமுத்து நாடார் சொல்ல வந்ததை, இடம், பொருள், ஏவல் தெரியாமல் சொல்லப் போறோமே என்று நினைத்துக்கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டார்.

உலகம்மையும், மாரிமுத்து நாடாரும் கரைக்கு வந்து விட்டார்கள். குளத்தின் தெற்கு எல்லையான கைக்கண்டார் கோவிலில் இருந்து புறப்பட்ட அவர்கள், வடக்கு எல்லையான உதிரமாடசாமி கோவிலை உற்றுப்பார்த்தார்கள். இரண்டு கிலோமீட்டர் தேறும். ‘இவ்வளவையும் ராகுகாலம் வாறதுக்குள்ள நடந்திட முடியுமான்னு’ கணக்குப் பார்த்துக்கொண்டே மாரிமுத்து நாடார் முன்னால் நடக்க, உலகம்மை எதுக்காகக் கூப்பிடுகிறார் என்று புரியாமல் பின்னால் போனாள்.

வெடவெடன்னு முள் தைக்கிறது மாதிரி பேசும் மாரிமுத்து நாடாரும் அவளிடம், பாசத்தோடு பேசிக்கொண்டு வந்தார்.

“ஏந்தாயி, பீடி சுத்துறத விட்டுட்ட...?”

ஏஜெண்டைப் பற்றிச் சொல்லலாமா என்று உலகம்மை நினைத்தாள். பிறகு, விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாமென்றும், ஏஜெண்ட் அவரின் சொந்தக்காரன் என்பதாலும் பேசாமல் நடந்தாள்.

“ஏம்மா, பீடிய விட்டுட்ட.”

“ஒரே இடத்துல இருந்தா, காலு பெருச்சாளி பத்திப் போவுது மாமா; இந்த வயசுல ஓடியாடி வேல பாக்கணுமுன்னு நெனைச்சேன்.”

ஊரை நெருங்க நெருங்க, அவர் நடையில் வேகம் தெரிந்தது. உலகம்மையும் மான்குட்டி மாதிரி துள்ளிக்கொண்டும், கன்றுக்குட்டி மாதிரி பாய்ந்து கொண்டும், மாராப்புச் சேலை காய்ந்து விட்டதா என்று எடுத்து எடுத்துப் பார்த்துக்கொண்டும் நடந்தாள்.

“வேகமா நடம்மா” என்றார் நாடார்.

மாரிமுத்து நாடார் சகஜமாகப் பேசியதால், உலகம்மையின் இயல்பான குறும்புத்தனம் வெளியே தலைகாட்டியது.

“அகலக் கால் வச்சா, ஆபத்தாச்ச மாமா.”

உலகம்மை அப்படிச் சொன்னாலும், அகலமாகத்தான் கால் வைத்தாள்.