பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பொதச்சிடலாம்" என்று சொல்லித் தட்டிவிட்டாள். பக்கத்து ஊர் மிராசுதார் தம் பையனுக்குக் கேட்டார். சம்பந்தப்பட்ட இந்த மிராசுதாரின் தாத்தா, ஒருகாலத்தில் திருமதி மாரிமுத்துவின் பாட்டி வீட்டில், தண்ணீர் பாய்ச்சியவராம்.... "போயும், போயும், வேலக்காரக் குடும்பத்திலயா பொண்ணக் குடுக்கறது? இதவிட 'பைரோன' வாங்கி அவளுக்குக் குடுக்கலாம்" என்றாள். இதே போல் இன்னொரு பி.ஏ. வந்தது. அந்தப் பையனின் ஒன்றுவிட்ட. பெரியம்மாவின் சின்னமாமனாரின் அத்தையோட பேத்தி, ஒருவனோடு ஓடிப்போய்விட்டாளாம். "ஓடிப்போன குடும்பத்துலயா சம்பந்தம் வைக்கது? இதவிட சரோசா கழுத்த ஒம்ம கையாலே நெரிச்சிக் கொன்னுடும்” என்று புருஷனைப் பார்த்துச் சீறினாள். கழுத்துக்குத் தாலி வரும்போதெல்லாம். அதை நெரிக்கச் சொல்லும் அம்மாவை நினைத்து அழுதாள் சரோஜா. அம்மாக்காரியோ "நான் பெத்த பொண்ணு. என்ன விட்டுட்டு போவணுமேன்னு அழுவுறாள்.. ஊரு உலகத்துல இருக்கது மாதிரி மினுக்காதவா குலுக்காதவா, சிலுக்காதவா -" என்று பெருமையடித்துக் கொண்டாள்.

ஆனால், 'நாலு காடு சுத்திய' மாரிமுத்து நாடாரால் பெருமையடித்துக் கொள்ள முடியவில்லை. பெண்டாட்டி பேச்சைக் கேட்டால், பெண்ணுக்குத் தாலி ஏறாது என்பதைக் காலங்கடந்து தெரிந்து கொண்டவராய் ஒரு மாப்பிள்ளைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். மாப்பிள்ளைப் பையனும், அவன் சித்தப்பாவும் பிள்ளையார் கோவில் ஆலமரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். சரோஜாவும் உலகம்மையும் கோவிலுக்குப் போகிற சாக்கில், அங்கே போக வேண்டும். பையன் பெண்ணைப் பார்த்த பிறகுதான் கட்டிக்குவானாம்.

"சீக்கிரம். ராகு வரப்போவுது" என்று அதட்டினார் மாரிமுத்து.

தாம்பாளம் ஒன்றில் தேங்காய், வெற்றிலைபாக்கு, ஊதுபத்தி ஆகியவற்றை வைத்துக்கொண்டு, உலகம்மை வாசற்படியைத் தாண்டினாள். சரோஜாவும் கையில் ஒரு மாலையை வைத்துக்கொண்டு, அவள் பின்னால் நடந்தாள்.

"ஜோடியா நடங்க, சேந்தாய் போல போங்க-" என்றார் நாடார்.

சரோஜா, சிவப்புக்கரை போட்ட பச்சைப்புடவை கட்டியிருந்தாள். உலகம்மை, பச்சைக்கரை போட்ட சிவப்புச்சேலை கட்டியிருந்தாள்.

இருவரும், 'பிள்ளையார் பிடிக்கப்' போய்க் கொண்டிருந்தார்கள்.