பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜாவாகி...

21


இருக்கான, தட்டுக்கெட்ட பய. பொம்பிளய ஜென்மத்துலயும் பாக்காதது மாதிரி வாயப்பிளந்துகிட்டுப் பாப்பான். ஆனால் இவரு சரோசாக்காவ பட்டும் படாம எப்படிப் பாக்காரு அக்கா குடுத்துவச்சவா. பிள்ளயாரு சாமி, யெனக்கும் இவருல நாலுல ஒரு அளவாவது ஆம்பிள கெடைக்கணும். ராமசாமி மாதுரி பொந்தன் வரப்படாது. வெள்ளச்சாமிப் பிராந்தன் மாதிரி ‘ஒடக்கு’ கூடாது...’

உலகம்மையும், சரோஜாவும், பிள்ளையார் கோவிலில் இருந்து சற்று தூரம் நடந்திருப்பார்கள். உலகம்மை திரும்பிப் பார்த்தாள். முதலில் சரோஜாவுக்காகப் பார்த்தவள். இப்போது தனக்காகப் பார்ப்பவள்போல், நாணத்தோடும் தலையை லேசாகச் சாய்த்துக் கொண்டும் பார்த்தாள். மாப்பிள்ளைப் பையன், முன்கால்களை ஊன்றி, பின்கால்களைத் தூக்கி, தன்னைச் சற்று உயரமாக்கிக் கொண்டு, அவளைப் பார்த்தான். உலகம்மை சட்டென்று தலையை திருப்பிக்கொண்டு சரோஜா காதில் ஏதோ கிசுகிசுத்தாள். பிள்ளையார் கோவிலை மறைக்கும் குறுக்கத்திற்கு வந்துவிட்டார்கள். திரும்புவதற்கு முன்னால், இறுதியாகப் பார்ப்பவள் போல், கழுத்தை மட்டும் திருப்பாமல், உடல் முழுவதையும் திருப்பினாள் உலகம்மை. பீடி ஏஜெண்ட் ராமசாமியின் பற்கள் தெரிந்தன. உடனே அவள் காறித் துப்பினாள். சரோஜா நாணத்தோடு உலகம்மையிடம் பேச்சைத் துவக்கினாள்.

“எப்டி இருக்கார் ஒலகம்ம...?”

“தக்காளியப் பாத்தா இவரு நெறத்த பாக்காண்டாம். எலுமிச்சம் பழத்த பாத்தா மூக்க பாக்காண்டாம். தேக்கு மரத்தப் பாத்தா உடம்பப் பாக்காண்டாம். ஒங்க வீட்டுக் கிடாயப் பாத்தா அவரு தோரணயப் பாக்காண்டாம். ஒன் பெரியய்யா மவன் ராமசாமியோட மூஞ்ச பாத்தா அவரு செருப்பப் பாக்காண்டாம்.”

சரோஜா சிரித்துக்கொண்டு தலைகவிழ்ந்தாள்.

“நல்லா பாத்தியா?”

“நல்லாவே பாத்தேன். நீ பாக்கலியாக்கா?”

“என்னால பாக்க முடியல. வெக்கம் பிடுங்கித் தின்னுட்டு. ஒயரமா இருக்காரா?”

“ஒனக்குஞ்சேத்து வளந்துருக்காரு...