பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சதியினைப் புரிந்து...

27


போய்விட்டதே என்று தவித்த நெடுநாள் ஏக்கம் தீர்ந்துவிட்டது. “ஏய்” என்று யாராவது கூப்பிட்டால், அதை “நாய்” என்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் பலவேசம் இப்போது அந்த ஒரு மாதிரி வார்த்தையைக் கேட்டதும் “அடி தேவடியா” என்று சொல்லிக் கொண்டு, சாட்டைக் கம்பை எடுக்கப் போனவர், வாயடைத்துப் போய் நின்றார். நடுலமகன் துளசிங்கம், அப்போதுதான் வீட்டுக்குள் வந்தான். அரிவாள்மணையும் அங்கேதான் கிடக்கு.

வீட்டுக்குள் செல்வாக்குக் குறைவதை ஈடுகட்டும் வகையில், பலவேசம் வெளியில் வாய்ச்சவடாலையும். வன்முறையையும். அதிகரித்துக் கொண்டார். இத்தனைக்கும் அவர், வெடவெடன்னு தட்டினால் பல்டி அடிப்பவர்போல் ஒல்லி மனிதர். ஊரில் ‘வறையாடு’ என்றும், அவருக்கு வக்கணை உண்டு. மகன் துளசிங்கம் மேல் அவருக்குக் கோபம் தணியவில்லை என்றாலும், சிறிது பெருமையும் உண்டு. அவரை மாதிரியே, அவனும் ‘கைநீட்டுகிறவனாய்’ உருவாவதில், அவருக்குச் சந்தோஷம். எந்தப் பயலையும் எப்ப வேணுமுன்னாலும் அடிக்கலாம் என்பதில் நம்பிக்கை. துளசிங்கம் விட்டுக் கொடுப்பானா என்ன?

அதே நேரத்தில் மூத்த மகன் தங்கப்பழம் மீது அவர் பாசத்தையும், பணத்தையும் கொட்டினாலும், அவநம்பிக்கைப்பட்டார். தங்கப்பழம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலு. ஒன்று எஸ்.எஸ்.எல்.சி. தேறியிருக்க வேண்டும்; அல்லது படிக்காமலே இருக்க வேண்டும். ஆனால் இந்த எஸ்.எஸ்.எல்.சி. பெயிலு இருக்கே, அது ரொம்ப மோசம், படித்தவன் என்ற முறையில், சர்க்கார் ஆபீசில் வேலைக்குப் போக முடியாது. படிக்காதவன் என்ற முறையில் வயல் வேலைக்கும் போக முடியாது. இந்தச் சமாச்சாரத்தில் மாட்டிக்கொண்ட தங்கப்பழம், ‘இஸ்திரி’ போட்ட சட்டையைத்தான் போடுவான். சினிமாவில் கதாநாயகன்கள் காரில் போவதைப் பார்த்து, தனக்குச் சைக்கிள்தானே இருக்கு என்று சங்கடப்படுவான்.

வேளாவேளைக்குத் தின்னுப்புட்டு சீட்டு விளையாடுவதுதான், அவன் உத்தியோத லட்சணம். மூளையை வளர்க்காமல் முடியை வளர்த்துக் கொண்டே போனான். வாய்க்குப் ‘பட்டை’ தீட்டுவதாகக் கேள்வி. தமிழ்ச் சினிமாக்களில் வரும் கதாநாயகன் மாதிரி, இந்திப் படங்களில் வரும் வில்லன் மாதிரி, அவன் ஒருவன்தான் அந்த ஊரில் மனுஷன் என்றும், ஏதோ சொல்ல முடியாத மிகப் பெரிய