பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சதியினைப் புரிந்து...

29


“மச்சான் எப்படியும் நம்ம கிட்டதான் வருவாரு வீணா எதுக்குக் கெட்ட பேரு” என்று நினைத்து, அவரும் கல்யாண சூழ்ச்சியைக் கைவிட்டார். ‘சரோசாவப் பாத்துட்டு சரிங்கறவன் மனுஷனா இருக்கமாட்டான். படிச்ச பையன் மனுஷனா இல்லாமலா இருப்பான்?’

கல்யாணம் நிச்சயமாகாது என்று அசராமல் இருந்த பலவேச நாடார். அதிர்ந்து போனார். அறுபது கழிஞ்சி நகையும், முப்பதாயிரம் ரூபாச் சுருளும் கொடுக்கப் போறாங்களாம். அடுத்த வெள்ளிக்கிழமை கல்யாணமாம்.

பலவேச நாடாரால் சும்மா இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு ‘நடுல’ மகன் துளசிங்கம், “யாரும் யாருக்கும் குடுத்துட்டுப் போறா. ஒமக்கு ஏன் சகுனி வேல பேசாம முடங்கிக்கிடும்” என்று எச்சரித்தான். அவன் அப்படிச் சொன்னதுக்காகவே, முடங்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று பலவேசம் துடித்தார். உலகம்மையை பெண்ணாகக் காட்டி சரோசாவை மணப்பெண்ணாக அமர்த்துவதற்கு நடந்த நாடகத்தைக் கேள்விப்பட்டதும், அவர் வெகுண்டெழுந்தார். கடைசில இந்த்ப் பனையேறிப் பய மவா உலகம்மதானா கல்யாணப் பொண்ணா நடிச்சா? பய மொவளுக்கு, நம்ம வீட்டு மனையில குடியிருக்கிற வந்தட்டிப் பய. மவளுக்கு. அவ்வளவு திமுரா பாத்துடலாம்.

பலவேச நாடார், உலகம்மையின் வீட்டுக்கு வந்தபோது அவள் அங்கே இல்லாததால், அவள் அய்யாமீது சிறி விழுந்தார். பாதி ஓலைகள் கலைந்தும், மீதி ஓலைகள் இத்தும் போயிருந்த அந்த ஒலை வீட்டில், நார்க்கட்டிலில் கையைத் தலையணையாக்கிப் படுத்திருந்த மாயாண்டி, அவர் பேசுவதையெல்லாம் வாங்கிக் கொண்டார். “சொள்ள மாடா, என் மவா இப்ப வரப்படாது. இந்தச் சண்டாளப்பய வாய்க்கு வந்தபடி பேசுறது அவ. காதுல விழப்படாது” என்று மாடனை வேண்டிக் கொண்டார். மாடன், அவர் வேண்டிய வரத்திற்குச் செவி சாய்க்காமல் உலகம்மையைக் கொண்டு நிறுத்தியதில், மாடன் மீது கோபப்பட்டவர்போல், அவர் குப்புறப் படுத்துக் கொண்டார். பலவேச நாடார் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருந்து விட்டு சாவகாசமாகக் கேட்டாள்:

“என்ன விஷயம்? சின்னய்யா ஏன் இப்டிக் குதிக்கிறாரு?”

“ஒண்ணுந் தெரியாதவ மாதுரி நடிக்கிறியா?”

“நான் நடிக்கவும் இல்ல தடிக்கவும் இல்ல.”