பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை உரைத்து...

39



கிடைக்காமல் போனால், சம்பளத்தால், அவன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது. கிம்பளம் வாங்க வேண்டும். இது அவனுக்குப் பிடிக்காதது. ஆகையால் அய்யாவுக்கு வருமானம் கிடைக்கும் இடத்தில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டான். என்றாலும், அதற்குக் குடும்பப் பொறுப்பு மட்டும் காரணமல்ல. எந்த வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், அதுவும் ஒரு ஜீவன்தான் என்று நினைப்பவன். அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல. அதே சமயம் அவன் முற்றும் துறந்த முனியும் அல்ல. அதனால்தான் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினான்.

பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பு, ஏதோ ஒரு பெரிய தியாகம் செய்வது போல் நினைத்திருந்தான். ஆனால் சரோஜாவைப் பார்த்தபிறகு, யந்திரகதியில் செயல்பட்ட இதயத்தில் தென்றல் வீசியது. அவன் பார்த்த பார்வை - மருட்சியோ, அகந்தையோ இல்லாத கண்கள், பாசாங்கோ பண்பாட்டுக் குறைவோ இல்லாத நடை - அத்தனையும் அவனைக் கவர்ந்துவிட்டன. இந்தச் சின்ன வயதில் வர்த்தகக் கலாசாரம் கிராமங்களுக்கும் பரவிய சூழலில், இப்படி ஒரு பெண் இருக்கிறாள் என்றால், அது பழக்க தோஷம்; அவள்கூட வந்த கட்டையான அந்த நடுத்தர வயதுப் பெண்மணிதான் காரணம் என்று அவன் அவளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டான். வாழையின் வாளிப்போடு ஆமணக்குச் செடி நிறத்தில் அளவான உயரத்தில் அமைந்த அவள், அவனுக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தாள். நாட்டுக்கட்டை மேனியில் பருவம் 'சன்மைக்கா' போல் பளபளக்க, படிக்காதவள் என்று பார்த்தவுடன் சொல்ல முடியாத நளினத்தையும், அன்பு செலுத்துவதற்காகவே வாழ்பவள் போலிருந்த சிரித்த முகத்தையும் கம்பீரமான, அதே சமயம் பெண்மை குறையாத பார்வையையும் அவன் தனக்குள்ளேயே இப்போதும் பார்த்துக் கொண்டு ரசித்தான்.

சிந்தனையில் ஈடுபட முடியாமலும், அதேசமயம், அதிலிருந்து விடுபட முடியாமலும், அழைப்பிதழில் எந்த ஜிகினாவை எங்கே வைப்பது என்று புரியாமலும், லேசாகத் தலைநிமிர்ந்த லோகு. வேகமாகத் தலையைத் தூக்கி, தோட்டத்துப்பக்கமாக ஊருக்குப்போகும் ஒற்றையடிப் பாதையைப் பார்த்தான். அதில் வந்து கொண்டிருந்த பெண்ணின் மிடுக்கான நடையும், ஏதோ எங்கேயோ ரயிலைப் பிடிக்க ஓடுபவள் போல் சென்ற வேகமும், அவனை லேசாகப் புருவத்தைச் சுழிக்க வைத்தன. அந்த உருவம் நெருங்க நெருங்க, அவளை