பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஒரு கோட்டுக்கு வெளியே ...


எங்கேயோ பார்த்தது போல் தோன்றியது – யார்? குட்டாம்பட்டிப் பெண் சரோஜா மாதிரி இருக்கே அவள்தானா? அவள் இங்கே ஏன் வாராள்...?

லோகு, அவசர அவசரமாக வழிப்பாதைக்கு ஓடிவிட்டு, ‘மூச்சு மூச்’சென்று இளைக்க, சற்றுத் தொலைவில் போய்க் கொண்டிருந்தவளை முந்திக்கொண்டு. வழிமறிப்பவன்போல நின்றான். உலகம்மையும் அவனை , அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்தவுடன், ஏனோ அழவேண்டும் போலிருந்தது. அவனைப் பார்ப்பதும், சற்றுத் தொலைவில் இருந்த ஊரைப் பார்ப்பதுமாக இருந்தாள். வாயடைத்துப்போய் நின்ற லோகுதான் பேச்சைத் துவக்கினான்.

“நீ, நீங்க குட்டாம்பட்டி சரோஜாதானே?”

அவள் பேசாமல், அவனையே மெளனமாகப் பார்த்தாள்.

“சொல்லுங்க, நீங்க மாரிமுத்து நாடார் மவள் சரோஜாவா? சொல்லுங்க. எனக்கு ஒன்னம் ஒடமாட்டங்கு. பிளிஸ்.”

பிரிக்கப்பட விரும்பாததுபோல் ஒட்டிக்கிடந்த உதடுகளை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு அவள் சொன்னாள்:

“என் பேரு சரோசா இல்ல, உலகம்மை.”

“மாரிமுத்து நாடார் மகள்தான?”

“இல்லே, வேலக்காரி.”

“வேலக்காரியா? நீதான பச்சை பார்டர்ல சிவப்புப் புடவை கட்டிக்கிட்டு பிள்ளையார் கோவிலுக்கு வந்தது. நான் யார்னு தெரியுதா?”

“தெரியுது, சரோசாக்காவுக்கு மாப்பிள்ள.”

“ஒன் கூட வயசான பெண் வந்தாளே அவள் பேருதான் சரோஜாவா?”

அவள் தலையாட்டினாள். அவன் பித்துப்பிடித்தவன்போல் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவன் இதுவரை ரசித்துக்கொண்டிருந்த பிடிபடாத அந்தத் தோட்டத்தின் சூட்சுமம் போல், புரிந்தது போலவும், புரியாதது போலவும் அவன் தன் தலையை மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டான். சிறிது நேரம் அந்த மெளனத்தில் நீர் உறைந்துவிடலாம். நெருப்பு அணைந்து விடலாம்.