பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை உரைத்து...

41



"எனக்கு ஒண்ணுமே புரியல. நான் ஒன்ன பொண்ணுன்னு நினைச்சிட்டிருந்தேன். நீ என்னடான்னா ... சரி, இப்ப எங்க போற?"

"உங்க வீட்டுக்குத்தான்."

"எங்க வீட்டுக்கா? எதுக்கு?"

அவள் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்குபவள் போல் யோசித்தாள். 'நமக்கேன் வம்பு. உங்ககிட்ட கல்யாண வேல எதுவும் இருந்தா, செய்றதுக்காக மாரிமுத்து நாடார் அனுப்பினார்னு சொல்லிவிட்டுப் போய்விடலாமா?' என்று கூட நினைத்தாள். ஆனால் அவன் முகத்தில் தெரிந்த இனந்தெரியாத பீதியைப் பார்த்ததும், அவன் ஒரு குழந்தையிடம் பேசுவதுபோல் தன்னிடம் பேசிய தோரணையைப் பார்த்ததும், அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை .

"என்னோட அய்யா பனைபேறி. அம்மா சின்ன வயசுலயே செத்துட்டா. கஷ்டப்பட்ட குடும்பம். அய்யாவுக்கு கால் விளங்கல."

திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, உலகம்மை தன்னையே திட்டிக் கொண்டாள். 'அடி. சண்டாளி! எதுக்கு வந்தியோ அத சொல்றத விட்டுப்புட்டு, மூணாவது மனுஷங்கிட்ட ஒன்னப்பத்தி ஏண்டி பேசுற? அவருகிட்ட சொல்லி ஒனக்கு என்னத்த ஆவப்போவது? அவரு என்ன ஒன் மாமனா மச்சானா?'

சிறிது நேரம் திணறிக்கொண்டிருந்த உலகம்மை, அவன் தன்னையே ஆச்சரியமாகவும், ஒருவித நடுக்கத்துடனும் பார்ப்பதை உணர்ந்ததும் மீண்டும் பேசினாள்.

"மாரிமுத்து மாமா என்ன சரோசாக்காவோட கோவிலுக்குப் போகச் சொல்லும்போது சும்மா தொணைக்குப் போகச் சொன்னாங்கன்னு நெனச்சேன். அப்புறந்தான் என்ன பொண்ணுன்னு ஒங்கள நம்பவச்சு சரோசாக்கால ஒங்களுக்குக் கொடுக்கறதுக்காக 'கவுல்' பண்ணுனார்னு தெரிஞ்சுது. என் உடம்பக் காட்டி ஒருவர ஏமாத்தறது எனக்குப் பிடிக்கல, நெனச்சிப் பாத்தேன். நீங்களே எங்க சரோசாக்கால. விஷயத்தைக் கேள்விப்பட்டா? நிச்சயமா அது தெரிஞ்சுடும். அடிச்சி விரட்டலாம். அதுல அக்கா செத்துப்போகலாம். இல்லாட்டி., நீங்களே திருமலபுரத்துப் பையன் மாதிரி விஷத்தக் குடிச்சிட்டு..."

அவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை . குரல் தழுதழுத்தது. கண்ணீர், இமைகளில் அணைக்கட்டு நீர்போல் தேங்கி நின்றது. அவன் இறந்து போவான் என்கிற வெறும் யூகத்தைத் தாங்க முடியாமலோ அல்லது சரோசாக்கா சாவதைப் பொறுக்க முடியாமலோ அழுதாள். 5 .4.