பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை உரைத்து...

43



சிக்கிக்கொண்டு தவிக்கும் குஞ்சைக் காக்கும் வகையறியாது. பறக்கும் சிறகில்லாது. நின்ற இடத்திலேயே சுற்றிக்கொண்டு வரும் தாய்க்கோழியாக, உலகம்மையைக் கற்பனை செய்து பார்த்தான். அந்த எண்ணம் தவறு என்பதுபோல், உலகம்மை பேசினாள். அவன் பதில் பேசுவான் என்று கால்கடுக்கக் காத்து நின்றவள், அவன் பேசாமலிருப்பதால் பயந்தவள் போலவும், அப்படிப் பேசிவிட்டாலும் பயப்படுபவள் போலவும், தான் சொல்வதையே கேட்கமுடியாத செவிடர்போல் பேசினாள்;

"அப்ப நான் வரட்டுமா?"

லோகு ஆகாயத்திலிருந்து கண்களை விலக்கிப் பூமியைப் பார்த்தான். பூமியில் படிந்த அவள் கால்களைப் பார்த்தான். பின்னர், அம்மாவையே அறியாமல், இடைப்பட்ட வயதில் ஒருத்தியை 'இவள் தான் ஒன் அம்மா' என்று சொன்னால் அவளை நெருங்கி மடியில் புரள முடியாமலும், அதே சமயம் நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தடுக்க முடியாமலும் தவிக்கும் எட்டு வயதுச் சிறுவனைப்போல், அவளைத் தவிப்போடு பார்த்தான். அவன் தவிப்பைவிட அவன் காட்டிய மௌனத்தை, தான் சொன்னதை அவன் ஏற்றுக்கொண்டான் என்ற தன்னம்பிக்கையில் அவள் பேசினாள்:

"எங்க சரோசாக்காவ நோகாம காப்பாத்தணும். அவங்க மாதிரி லட்சத்துல ஒருவர் கெடைக்கது அபூர்வம். ஒரு சோத்துக்கு ஒரு அரிசி பதம் மாதிரி சொல்றேன். கேளுங்க. அக்காவோட வாறதுக்காக அவ சீலையைக் கட்டிக்கிட்டு நான் வந்தேன். வூட்டுக்கு வந்தவுடனேயே அவா அம்மா சீலய அவுக்கச் சொன்னா, அதுக்கு அக்கா என்ன சொன்னாத் தெரியுமா? ‘அந்த சீலயே அவா கட்டிபிருக்காலதான் நல்லா இருக்கு. எனக்குத்தான் ஏழட்டுச் சீல இருக்க. இத, அவளே வச்சிக்கிடட்டு முன்னு சொன்னா. வேற யாரும் இப்படிச் சொல்லுவாவுளா? ராசா மாதிரி மாப்பிள்ள கெடச்சதுல அக்காவுக்கு சந்தோஷம், நீங்க குடுத்துவச்சவிய. அவளும் குடுத்துவச்சவதான். ஒங்களமாதிரி ஒருவர் இந்த உலகத்துல்லே இருக்க முடியுமா? நான் வரட்டுமா?"

அவன் பேசாமல், அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். ஏழ்மையோடு மட்டுமில்லாமல் தன் இதயத்தோடும் போராடுவதுபோல் தோன்றிய அவளையே, அவன் ஊடுருவிப் பார்த்தான், அவளால். அந்தப் பார்வையைத் தட்டவும் முடியவில்லை , தாளவும் முடியவில்லை .

சிறிதுநேரம் அவனையே பார்த்துக்கொண்டு நின்றவள், இறுதியில் 'வரட்டுமா?' என்று சொல்லாமல் மெள்ள நடந்தாள். அவள்