பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஒரு கோட்டுக்கு வெளியே ...


பிரயோஜனமில்லாத கட்டை. ஆனா சரோசாக்கா என்னைத் தப்பா நெனச்சா என்னால தாங்க முடியாது. கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க இத அவாகிட்ட பேசப்படாது. இதுக்குத்தான் காலையில நாலு மணிக்கே எழுந்திருச்சி யாருக்கும் தெரியாம ஓடியாந்தேன். நான் வாறேன்.”

உலகம்மை அவனைத் திரும்பிப் பார்க்காமலே, வேகமாக நடந்தாள். யாருக்கும் தெரியாமல், அவனிடம் மட்டும் ரகசியம் பேசியது ஒருவித இன்பத்தை, தன்னை மீறி, தனக்களிப்பதை உணர்ந்த உலகம்மை, சரோஜாவின் நல்ல குணங்களையும், அவள் புடவை கொடுக்க முன்வந்ததையும் நினைத்துக்கொண்டே, ‘சரோசாக்கா நல்லவா. நல்லவா’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டே நடந்தாள். என்றாலும் ஒரே ஒரு சமயம், அவளால், திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் திரும்பிப் பார்த்தபோது, அவன் மீண்டும் தோட்டத்திற்குள் திரும்பிக் கொண்டிருந்தான். அவள் உடலெல்லாம் கரிப்பதுபோல், மேற்கொண்டு நடக்க முடியாத அளவுக்குக் கனத்ததுபோல் அவளுக்குத் தோன்றியது. ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போன்ற உணர்வுடன், அவன் திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கத்துடன், அந்த எண்ணத்திற்கு வெட்கப்பட்டு தன்னை வெறுப்பவள் போலவும், ஒரு தடவை காறி உமிழ்ந்துவிட்டு அவள் நடந்து கொண்டிருந்தாள்.

தோட்டத்திற்குப் போய் அங்கே குவிந்து கிடந்த சரலில் ஏறி நின்றுகொண்டு தன்னையே அவன் பார்த்துக்கொண்டிருப்பது தெரியாமல், திரும்பிப் பாராமலே அவள் நடந்தாள்.

ஆனால் பீடி ஏஜெண்ட் ராமசாமி திரும்பிப் பார்க்காமல் போகவில்லை. குட்டாம்பட்டிக்கு பீடி இலை வராததால், சட்டாம் பட்டிக்காவது வந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சைக்கிளில் போய்க்கொண்டிருந்த அவன், உலகம்மையைப்போல் இருக்கே என்று நினைத்தவன், அரை பிரேக் போட்டுக்கொண்டு. பெடலை மிதிக்காமல் மெள்ளப் போனான். பிறகு ஒரு பனைமரத்தடியில் ‘ஒதுங்குபவன் போல்’ பாவலா செய்துகொண்டு நின்றவன், இப்போதுதான் சைக்கிளை உருட்டிக்கொண்டு. பெடலில் காலை வைத்தான்.