பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஒரு கோட்டுக்கு வெளியே ...


தெரியும் என்பது அவளுக்குத் தெரியும். அதே நேரத்தில் அய்யா, ஆயிரந்தான் கலக்கம் வந்தாலும், அவளிடம் கேளாமல் அதை எடுக்க மாட்டார் என்பதும், அவளுக்குத் தெரியும். சாயங்காலம் கலக்கலுக்குக் குடுக்கிற காசுக்கு ஒரு முட்டை வாங்கி அடைபண்ணி அய்யாவுக்குப் போடணும் என்று நினைத்துக்கொண்டு வயலைப் பார்த்து நடந்தாள்.

வயலில், இன்னும் மூன்று ‘தட்டுக்கள்’ நடாமல் கிடந்தன. அதோடு நாற்றங்கால் இருந்த ஒரு மரக்கால் விதப்பாட்டையும் இன்றைக்கு நடவேண்டும்.

கண்மாய்க்கு மேற்கே, குளத்துக்குள் குதித்துக்கொண்டிருந்த பெரிய பையன்களை ‘காப்பி’யடிப்பது மாதிரி, கிழக்கே முட்டளவு ஓடிக்கொண்டிருந்த நீரிலே விளையாடிய சின்னப் பையன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் நடந்தாள். அவளுக்கும் இப்டி ஒரு தம்பி இருந்தா எப்டி இருக்கும். அய்யாவுக்கும் காவலா இருக்கும்.

மடைவாய்க்குள் வலையை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம், “மாமா, நமக்கும் கொஞ்சம் மீன் குடுக்கக்கூடாதா? இன்னும் ஆறு மாசத்துக்கு ஒம்ம வீட்டில மீன் வாசனதான் இருக்கும். அப்பறம் கருவாட்டு வாசன” என்று கிண்டல் செய்துகொண்டே அவள் வயலுக்குப் போனபோது பத்துப் பன்னிரண்டு பெண்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள்.

“என்னழா இன்னிக்கு ஒனக்கு வந்தது? ஏன் சீக்ரமா வரல” என்று எல்லோருக்கும் பிரதிநிதிபோல் பேசிய ஒரு கிழவியின் கேள்விக்கு. “என்ன பாட்டி, கண்ணு வீக்கமா இருக்கு” என்று பதிலளித்துக் கொண்டே, அவள் வயலுக்குள் நுழைந்து, ஒரு மொட்டைப் பாத்தியில் அடுக்கப்பட்டிருந்த நாற்றுக் கட்டுகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு குனிந்தாள். “ஒலகு இந்தப் பக்கமா வா” என்று சில பெண்கள் தத்தம் பக்கம் அவளை இழுக்கும் முயற்சியை வார்த்தையாக்கினார்கள். ஏதோ ஒரு பக்கமாய் நின்று குனிந்து அவள் நட்டுக்கொண்டிருந்தாள்.

ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.

“ஏய் உலகம்மா. ஒன்னத்தான் ஒன்னத்தான்” என்று கத்திக் கொண்டே வந்த வெள்ளைச்சாமி, குத்துக்காலில் சாய்ந்து கொண்டிருந்தான். அவன், எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. கரை வழியாய் வர்றவன் மாதிரியும் இல்லை. பம்ப் செட்டுக்குள் படுத்துக் கொண்டிருந்தவன் மாதிரியும் தெரியவில்லை. திடீர் இட்லி, திடீர் காபி மாதிரி திடுதிப்பென்று வந்து நின்றான்.