பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

வருகிறது என்றும் கணிசமான காதல் இல்லை என்றும் இடையில் விட்டதுண்டு. அதேசமயம் சில பகுதிகளை அங்குமிங்குமாகத் திருடிப் பல படங்களில் சேர்த்துக் கொண்டதுமுண்டு.

இந்த நாவல் இதுவரை நூலகத்துக்குள் நுழைந்ததில்லை. ஆனாலும் எனது நாவல்களிலேயே இதுதான் அதிகமாகப் பேசப்படுகிறது. இந்தத் தருணத்தில் இந்த நாவலை முதன்முதலில் வெளியிட்ட கிருஸ்தவ இலக்கியச் சங்கத்திற்கும் அப்போது இதைப் பிரசுரத்திற்கு அங்கீகரித்த பேராசிரியர் பாக்கியமுத்து அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் இந்த நாவலைப் பற்றித் தாம் செல்லுமிடமெல்லாம் சிறப்பாகப் பேசிய சென்னை வானொலியின் முன்னாள் இயக்குநர் கவிஞர் துறைவன் அவர்களுக்கும் ஏராளமான வாசகப் பெருமக்களுக்கும், திறனாய்வாளர்க்கும் எனது நன்றி உரித்தாக வேண்டும்.

இப்போது இந்த நாவல் புது வடிவத்துடன் இரண்டாவது பதிப்பாக வெளிவருகிறது. இதை அழகாக வெளியிடும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் உரிமையாளர் பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களுக்கும் இந்த நிறுவனத்தின் மேலாளர், இரா. குருமூர்த்தி அவர்களுக்கும் நான் நன்றிக் கடப்பாடு கொண்டுள்ளேன்.

இந்த நாவலில் வரும் கிராமம் இப்போது இல்லை. ஆனாலும் ஆதிக்க சக்திகள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. அப்போது ஒரு தனிப்பட்ட பெண்ணாக இருந்த உலகம்மை இப்போது பெரும்பாலான கிராமங்களில் ஒரு வர்க்கமாக வளர்ந்துள்ளாள். இதில் ஒரு வினோதமென்னவென்றால் ஆதிக்க சக்திகள் குறையக் குறையத்தான் அல்லது குறைந்து குறைந்து தான் அடிமையாக்கப்பட்ட சக்திகள் மேலோங்கும். ஆனால் நமது கிராமங்களிலோ இந்தத் தலைகீழ் விகிதாச்சாரங்கள் போய் இரண்டுமே நேர்-எதிர் விகிதாச்சாரத்தில் எழுந்துள்ளன. இந்தப் புதிய தோற்றத்தைப் பலப்படுத்த நவீன படைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நாவலுக்கு ‘என்னுரை’ எழுதும் இந்தத் தருணத்தில் மனம் வாதைப்படுகிறது. சினிமாக்காரர்கள் சாதிகளின் பெயரால் வர்க்க விரோத படங்களை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஒரு காலத்தில் சாதியைச் சொல்லக் கூச்சப்பட்டவர்கள்கூட இப்போது பகிரங்கமாகவே தத்தம் சாதிகளை, பெருமையடித்துத் தெரிவித்துக் கொள்கிறார்கள். இத்தகைய