பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஒரு கோட்டுக்கு வெளியே ...


அடித்துக்கொள்ளும் சத்தம் அவளுக்கு நன்றாகக் கேட்டது. அவன், வேறு யாரையோ பேசுவது மாதிரியும் அவளுக்குத் தோன்றியது. இந்த மாதிரி யாருமே, அவளைப் பேசியதில்லை. கிராமத்து வாலிபப் பெண்கள் ‘கெட்ட’ வார்த்தைகள் பேசுவதை, வெறுப்பவள் அவள். ‘நம்ம உலகுதான் நூத்துல ஒருத்தி. அவா வாயில மறந்துகூட ஒரு கெட்ட வார்த்த வராது’ என்று பல ‘கெட்ட வார்த்தை’ பெண்களாலேயே புகழப்பட்டவள். வெள்ளைச்சாமி பேசியதைக் கேட்டும் சாகாமல் இருக்கிறோமே என்று வருத்தப்பட்டாள். அப்படிப் பேசிய அவனை, சாகடிக்காமலும் இருக்கிறோமே என்று கோபப்பட்டாள். ஒன்ன ராத்திரில அவமானப்படுத்திட்டா என்று அவள் தந்தை சொன்ன நாளிலிருந்து, இடுப்பில் யாருக்கும் தெரியாமல் ஒரு சின்னக் கத்தியைச் செருகி வைத்திருக்கும் அவள், இப்போது அந்தக் கத்தியை எடுத்து அவன் தொண்டைக் குழியைக் குத்தி நெஞ்செலும்பைத் ‘தென்னி’ எடுக்கலாமா என்றுகூட நினைத்தாள். சில சினிமாப் படங்களைப் பார்த்திருக்கும் உலகம்மை, இத்தனை கலக்கத்திலும், லோகநாதன் அங்கே திடுமென்று வந்து, வெள்ளைச்சாமியை உதைப்பது போலவும், அவன் கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலவும், தேவடியா என்று சொன்ன அவன் உதடுகளைப் பனைமரத்தில் வைத்துத் தேய்ப்பது போலவும், அது முடிந்ததும் அழுதுகொண்டிருக்கும் அவளை அணைத்துக் கொள்வது போலவும் கற்பனை செய்து பார்த்தாள். பிறகு ‘இப்டி புத்தி கெட்டதனமா சரோசாவுக்குத் துரோகமா நெனக்கிற என்னை அவன் என்ன சொன்னாலும் தகும்’ என்று நினைத்துக் கொண்டாள். இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்:

“ஒனக்கு நான் என்ன பண்ணுனேன் வெள்ளையா? ஏன் இப்டி அவமானமா பேசுற?”

“எனக்குப் பண்ணினா என்ன? எங்க பெரிய்யாவுக்குப் பண்ணினா என்ன? நாக்குமேல பல்லுப்போட்டுப் பேச ஒனக்கு வெக்கமா இல்லழா? வயல விட்டுவா நாய.”

இதர பெண்களும், ஸ்தம்பித்துப்போய், நாற்றுக்கட்டுகளை நீருக்குள் போட்டுவிட்டு எதுவும் புரியாதவர்களாய் நின்றார்கள். குளக்கரையில் மாரிமுத்து நாடார் மனைவி பேச்சி வந்து கொண்டிருந்தாள். வெள்ளைச்சாமி, பெரியம்மைக்குக் கேட்கவேண்டும் என்பதுபோல, தன்னைக் கதாநாயகனாய் நினைத்துக்கொண்டு, பேச்சியின் திருப்தியைச் சம்பாதிக்கும் முறையிலும் மேலும் மேலும் கெட்டகெட்ட