பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓட நினைத்து...

53



ஆம்புளைய அடிக்கப் போறியளா? பிராந்தங்கறதுக்காக இளக்காரமா" என்று சொல்லிக் கொண்டு வந்த பேச்சியைப் பார்த்ததும், முன்னேறிக் கொண்டிருந்த பெண் கூட்டம் பின்வாங்காமலும் முன்வாங்காமலும் அப்படியே நின்றது.

பேச்சி, இன்றுதான் அவர்களை நேருக்குநேராகப் பார்த்துப் பேசுகிறாள். கூலிக்கு வேலை பார்க்கும் அத்தனை பேரும், அவர்கள் எந்த நாட்டில் எந்தக் கண்டத்தில் இருந்தாலும், அவர்கள் வேலைக்காரிகளே - அதுவும் தனது வேலைக்காரிகளே - என்று நினைப்பவள் அவள். "வேலக்காரப்பய ஒம்ம முன்னால பீடி குடிச்சான். பேசாம இருக்கியரே. வேலக்கார நாயிங்க கிட்ட சரிக்குச் சமமா பேசுனா இப்படித்தான். நாயக் கொஞ்கனா மூஞ்ச நக்கும்” என்று புருஷனைக் கண்டிப்பாள். இந்த ‘சரிக்குச்சம' அதாவது சரி நிகர் சமத்துவத்தை தலைகீழாகப் பின்பற்றுவதில், தலைகீழாக நிற்கவும் தயங்காதவள். ஒரு சமயம் "ஏக்கா ஒங்க சரோசாவுக்கு எப்ப கல்யாணம்?" என்று எதேச்சையாகக் கேட்ட ஒரு விவசாயக் கூலிப்பெண்னை , "ஆமா ஒங்கிட்ட யோசன கேட்டுட்டுத்தான் முடிக்கணும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்டவள். அவள் 'நாட்டாமை நல்லச்சாமி நாடார் மவள்'. அவள் பிறந்த ஊரில், அவள் அய்யா நாட்டாண்மைக்காரர். அதுவும். இப்போது படித்த இளைஞர்களால் பறி போய்விட்டது. அந்தக் காலத்தில், ஊரில் அம்மங்கொடையோ, ஆத்தாக் கொடையோ நடக்கும்போது, குடித்தனக்காரங்க அவருக்கு கோயிலில் வெட்டிய ஆட்டுக்கிடாவில் தொடைக் கறியைக் கொடுத்துவிட வேண்டுமாம். குளத்தில் மீன் அழிந்தால், முதல் விரால் மீனும் அவருக்குத்தான். கல்யாணம் போன்ற நல்லது நடந்தால், அவரிடம் நாலுபடி அரிசியும், இரண்டு தேங்காயும் கொடுக்க வேண்டுமாம். கருமாந்திரம் மாதிரி கெட்டது நடந்தால். ஒரு துண்டுக் கருவாடும், பத்துப் பலக் கருப்புக்கட்டியும் கொடுக்க வேண்டுமாம். 'வாட்ச்மேன்' மாதிரி, சோவில் சாவியும் அவரிடம்தானாம்.

இப்படிப்பட்ட 'நாட்டாமைச்' சூழலில் வளர்ந்த பேச்சியமை ஐம்பதுக்குமேல் வயதாகியும், இன்னும் 'கர்நாடகமாகவே' இருந்தாள். இதர பணக்காரப் பெண்கள் ஓரளவு தங்களை மாற்றிக் கொண்டதைக்கூட அவள் வெறுத்து, "கெட்டாலும் மேன்மக்க மேன் மக்க தான்" என்று தமிழ்ச் செய்யுளுக்கு அனர்த்தம் செய்து. கெட்டு நொறுங்கிப்போன அய்யா நிலையை நியாயப்படுத்துபவள். சரோஜா கிழவியாகிப் போனதுக்கு இவளே காரணம்.