பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

ஒரு கோட்டுக்கு வெளியே ...


லோகநாதன் மீது அவளுக்குக் கோபம் வந்தது. ‘படிச்சவன’ நம்பக்கூடாது என்பது எவ்வளவு உண்மை! ஈரத்துணியைப் போட்டு கழுத்தறுத்துட்டான், பாவி. சரோசாக்கா இப்போ எப்டி இருக்காளோ?”

பெண்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தபோது. உலகம்மை ஒரு முடிவுக்கு வந்தாள். பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசினாள்.

“நான் சட்டாம்பட்டிக்குப் போனது வாஸ்தவந்தான். அதுக்காவ வருத்தப்படவும் இல்ல, சந்தோஷப்படவும் இல்ல. ஏதோ என் போதாத காலம். இல்ளவும் நடந்த பிறவு நான் இவங்க வயலுல நுழையுறது தப்புத்தான். எனக்காக நீங்க வராண்டாம். நான் வாரேன்.”

உலகம்மை விருட்டென்று நடந்தாள். அதுவரை அழாமல், கோபத்தால் கன்றிச் சிவந்த அவள் விழிகள் நீரைக் கொட்டின. அவள், “சரோசாக்கா நம்மளப் பத்தி என்ன நினைப்பாள்!” என்றுதான் வருத்தப்பட்டாளே தவிர, வெள்ளைச்சாமியைப்பற்றி அவள் அதிகமாக அலட்டிக்கவில்லை. அதற்காக, அவன் வார்த்தைகள் மறந்து போகக் கூடியவை அல்ல. அவன் அப்படித் திட்டியபோது, இதர பெண்கள் தாயைப் போல பரிந்து பேசியது. அவள் இதுவரை அனுபவித்திராத புதிய பாசம், அவளையறியாமலே கண்ணீர் விட்டாள். ஐந்து வயதிலே அம்மாவை இழந்து தாய்ப்பாசத்தின் கனபரிமாணத்தை உணராத அவள், அந்தப் பெண்கள் அவளுக்காகப் பரிந்து பேசியபோது. அவள் அம்மாவே, பத்துக் கூறுகளாகி, ஒவ்வொன்றும் ஒரு தாயாக அங்கே நட்டுக் கொண்டிருந்ததுபோல், அவளுக்குத் தோன்றியது. அவளுக்காக அவர்கள் வேலையை விட்டுவிட்டு வரத் தயாராக இருந்ததும் அவளுக்குக் கொஞ்சம் இதமாகவே இருந்தது.

உலகம்மை, ஊருக்கருகே வந்து விட்டாள். என்ன நடந்தது என்பது தெரியாதவள் போலவும், என்ன நடக்கும் என்பது புரியாதவளைப் போலவும் தலையைக் கீழே தொங்கப்போட்டுக் கொண்டே நடந்தாள் “லோகு சொல்லியிருப்பாரோ? சேசே, சொல்லியிருக்க மாட்டாரு. சரோசாக்காவ கட்ட மாட்டேன்னுட்டாரா? அது அவரு இஷ்டம். தங்க ஊசின்னு கண்ணுல இடிக்க முடியுமா? பாவம் சரோசாக்கா, என்னப் பத்தி என்ன நினைப்பா? நான் செஞ்சது சரிதானா? அவங்கமட்டும் மாப்பிள்ளய ஏமாத்தப் பார்க்கலாமா? அவரும் பாவந்தான். அவளும் பாவந்தான். ஆனால் நான்தான் பாவி, பொறக்கக்கூடாத பாவி..”