பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடியது கண்டு....

59


வீட்டைவிட்டுப் புறப்பட்டபோதே, அவளுக்குத் தாங்கமுடியாத உற்சாகம்: என்றுமில்லாத வழக்கமாக, தலையை 'சீவிக் கொண்டாள்'. ஒரு சிரட்டையில் கருப்பாகக் கிடந்த 'பொட்டை' ஆள்காட்டி விரலால் அழுத்தி நெற்றியில் வைத்துக் கொண்டாள். அய்யாக்காரர், கனைத்துக்கொண்டு, தலையைச் சொறிந்தார்.

"ஒம்மத்தான். அடுக்களப் பானைக்குமேல நெலக்கடல வருத்து வச்சிருக்கேன். மத்தியானமா தின்னும். சோளச் சோறும், அவுத்திக் கீரையும் இருக்கு, சாப்புட மறந்துடாதேயும்."

"நான் சாப்புடுற நிலயிலா இருக்கேன்? ஊர்ல ஒன்னப் பத்தி பேசுறத கேட்டுக்கிட்டு இன்னுஞ்சாவாம இருக்கேன்! ஒனக்கும் இந்த புத்தி ஆகாது. நாம உண்டு, நம்ம வேல உண்டுன்னு இருக்காம வழில போற சனியன மடியில போட்டுக்கிட்ட."

"போம்போது ஏய்யா மறிக்கியரு."

"நான் மறிக்கல. என் தலையே வெடிச்சிடும் போலருக்கு. ந வாரது வரைக்கும் எப்படித்தான் இருக்கப்போறேனோ? நீ வூட்டுக்கு வந்து சேருறது வரைக்கும் உயிர கையில் பிடிச்சிக்கிட்டு இருக்கேன்.."

"பேசாம தூங்கும்."

"தூங்க முடியலியே. கொஞ்சம் போட்டா ஒரு வேள..."

உலகம்மை லேசாகச் சிரித்துக்கொண்டாள். கலையத்திலிருந்து ஒரு ரூபாயை எடுத்தாலும், அதைக் கொடுக்க மனமில்லாமல், கையிலேயே வைத்துக்கொண்டு "ஏய்யா ஓமக்கு இந்தப் புத்தி? சாராயம் குடிச்சி மெட்ராஸ்ல செத்துட்டாங்கன்னு சொன்னப் பொறவும் இதுக்கு ஆசப்படலாமா?" என்று கேட்டாள்.

மாயாண்டி உற்சாகமாகப் பதில் சொன்னார்.

"சைக்கிள்ல போறவன்ல ஒருத்தன் லாரியில் அடிபட்டுச் சாவுறான். அதுக்காவ சைக்குள் விடாமலா இருக்காங்க? ரயிலுகூட விழுந்துடுது. அதுக்காவ ஓடாமலா இருக்கு நான்கூட பனமரத்துல இருந்து விழுந்து கால ஒடிச்சிக்கிட்டேன். அதுக்காவ ராமசுப்புவும் அயோத்தி ராமனும் பனையில ஏறாமலா இருக்காங்க சாவு வரணுமுன்னா வந்தே தீரும். சாராயத்தாலதான் சாவு வரணுமுன்னுல்லே."

உலகம்மைக்கு அப்போதிருந்த உற்சாகம், அய்யாவின் பேச்சைக்கேட்டு சிரிக்க வைத்தது. ஒருரூபாய் நாணயத்தை அவரிடம்