பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஒரு கோட்டுக்கு வெளியே ...


நீட்டிவிட்டு, "வெளில சுத்தாம, பேசாமப்படும்; சொல்றது கேக்குதா" என்று கேட்டுவிட்டு, அவர் 'கேக்கு கேக்கலன்னு' சொல்லும் முன்னாலே, தெருவிற்கு வந்து விட்டாள்.

சட்டாம்பட்டிக்குக் கிழக்கே. ஊரை ஒட்டியிருந்த வயக்காட்டில் இதர உள்ளூர்ப்பெண்களுடன் அவள் நட்டுக் கொண்டிருந்தாள். லோகுவைப்பற்றி எப்படி விசாரிக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்தாள். அவன், அந்தப் பக்கம் வந்தாலும் வருவான் என்று, அவனைத் தேடுவது போல் நாலு பக்கமும் பார்த்தாள். ஒருத்தியிடம் லேசாக, சந்தேகம் வராதபடி பேச்சுக்கொடுத்தாள்.

"எக்கா, எங்க ஊரைவிட ஒங்க ஊர்ல படிச்சவங்க நிறயப் பேரு இருக்காங்க போலுக்கே."

"அதனாலதான் ஒங்க ஊரவிட எங்க ஊரு குட்டிச்சுவரா போயிக்கிட்டு வருது."

"ஏக்கா அப்படிச் சொல்ற. ஒங்க ஊர்ல படிச்சவங்க வந்து பந்து விளையாட வல கட்டியிருக்காங்களாம். நாடகம் போடுறாங்களாம்."

"அதுக்கு மட்டும் குறச்ச இல்ல. இந்தப் பயபிள்ளிய தின்னுப்புட்டுக் கிடா மாதிரி ஊரச் சுற்றதும், வயசுப் பொண்ணுகளப் பார்த்துக் கண்ணடிக்கதும் ஒரே பொரெளி ! அய்யா காச திங்குதுங்களே, இதுங்க அப்புறம் என்ன பண்ணுது தெரியுமா? வேலையில் சேர்ந்ததும் பய பிள்ளியளுக்கு கண்ணுந் தெரியமாட்டங்கறது, காலுந் தெரிய மாட்டக்கு. நாலு மொள வேட்டியக் கட்டிக்கிட்டு, நாயா ஊரச் சுத்துன பயபிள்ளியல்லாம் முழுக்கால் சட்டயப் போட்டுக்கிட்டு, கோயிலுக்குள்ள கூடச் செருப்போட போவுதுங்க! காலுல கரையான் அரிக்க."

இன்னொரு பெண்ணும் பேச்சில் கலந்து கொண்டாள்.

"படிக்காத பயலுவளப் பாத்தா இவனுக எவ்வளவோ தேவல தெரியுமா? நம்ம ஊர்ல பிச்ச எடுக்காத குறையா அலஞ்சான, முத்து. அவன் சங்கதி தெரியுமா? மெட்ராஸ்ல போயி பலசரக்குக் கட வச்சி பயமவனுக்கு காசு சேந்துட்டு போலுக்கு. போன மாசம் அம்மன் கொட சமயத்துல அவன் வந்து குலுக்குன குலுக்கு. இருட்டுலயும் கண்ணாடி! தாறு பாச்ச பய ம்வனுக்குப் பேண்டு! சட்ட! நல்லா இருக்கட்டும். ஆனால், பழயத மறந்து அந்தப் பய ஒரு வாள மரத்த பாத்துட்டு 'இதுல என்ன காய்க்குமுன்னு' கேட்டானாம். எப்டி இருக்கு கதை? நம்ம