பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஒரு கோட்டுக்கு வெளியே ...



அஞ்சாறு தங்கச்சிய இருக்கு. அவளுவளுக்கு இப்டி ஆனா சம்மதிப் பானா?"

"ஏன் மாட்டேன்னாராம்?"

"பலர் பலவாறு பேசுறாங்க. ஒங்க ஊர்ல இருந்து எவளோ ஒருத்தி மோகினி மாதிரி அவன்கிட்ட தோட்டத்துல வந்து பேசுனாளாம். அந்தத் தேவடியா முண்ட பேச்சக் கேட்டுக்கிட்டு, இந்தப் பய, அய்யாகிட்ட முடியாதுன்னுட்டானாம். ஒரு காலத்தில் நாங்கெல்லாம் எங்க ஊருக்குப்போவும் போது வீட்டுக்காரர்கூட சேந்து போவ வெக்கப்படுவோம். ஊரு போறது வரைக்கும் சேந்து போனாலும் ஊரு வந்துட்டா ஒரு பர்லாங்கு தள்ளி நடப்போம். அவரு யாரோ நாங்க யாரோங்ற மாதிரி. இப்ப என்னடான்னா கல்யாணம் ஆகாத ஒருமுண்ட இவங்கிட்ட தளுக்கிப்பேசி ஒரு குடியக் கெடுத்திட்டா. பாவம் சங்கர நாடார் மவளுவள கரையேத்த இந்தக் கல்யாணத்ததான் நம்பியிருந்தாரு."

உலகம்மையால் மேற்கொண்டு பேச முடியவில்லை. இடது கையில் வைத்திருந்த நாற்றுக்கட்டை எடுத்து, வலது பாதத்தில் அடித்துக் கொண்டாள். குறுக்கு வலியைப் போக்க நிமிர்ந்தவள் போல் நிமிர்ந்து லேசாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். நடந்த விபரம் முழுவதையும், அந்தப் பெண்களிடம் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. நீ செஞ்சது சரிதான்' என்று அவர்கள் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் எதுவும் அவளுக்கு ஓடவில்லை . அவள் தூரத்து உறவுப் பாட்டி ஒருத்தி சட்டாம்பட்டியில் இருக்கிறாள். இன்று சாயங்காலம் ஊருக்குப் போகிற வழியில் அவளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். இப்போது அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டாள். லோகு வருவதைப் பற்றி இப்போது அவளுக்கு அக்கறை இல்லை. ஆனால், இப்போதும் நாலுபக்கமும் பார்த்தாள். 'சட்டாம்பட்டிய மிதிக்காம ஊருக்குப் போறதுக்கு வேற வழியிருக்கான்னு' தெரிந்து கொள்வதற்காகப் பார்த்தாள். அல்லது அப்படிப் பார்ப்பதாக நினைத்தாள்.

வேலை முடிந்ததும், வழக்கமாக வாய்க்கால் நீரிலோ, கமலக்கிடங்கில் பெருகி நிற்கும் தண்ணீரிலோ கால் கைகளை அலம்பும் பழக்கத்தைக் கைவிட்டவளாக அவள் வரப்பு வழியாக நடந்தாள். மிகப் பெரிய சுமை ஒன்று தலையில் அழுத்துவதுபோல் இருந்தது. தீர்வு காண முடியாத ஒரு பழிபாவத்திற்கு ஆளாகி விட்டதுபோல், கூனிக் குறுகி நடந்தாள். 'ரன்தான் பிறந்தோமோ? ஒரு பொண்ணோட உடம்ப காட்டி