பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடியது கண்டு...

65


தராசை, அவர் சமமாகப் பிடித்திருந்தார்.

உலகம்மையால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. எழுபதைத் தாண்டிய ஒரு கிழவனை, நடக்க முடியாத காலோடும். குணப்படுத்த முடியாத நோயோடும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வயசான மனுஷனை, அழிக்கப் பணமும் அம்பலத்துக்கு ஆளும் இல்லாமல் தனிமரமாய்த் தவிக்கும் ஒரு அப்பாவியை, ஆயிரம் பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில், எல்லோருக்கும் பொதுவான காளியம்மன் சந்நிதி முன்னால், ஒரு கோட்டுக்குள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் ஊரில் ஒரு மாற்றமும் இல்லை. ஊர் ஜனங்களிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லை. வாலிபால் விளையாட்டு நடக்கு டீக்கடைகள் இருக்கு. கருவாட்டு வியாபாரம் நடக்கு அன்றாட வேலைகள் அப்படியே நடக்கின்றன. தராசுகூட சமமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆச்சரியமும், அதிர்ச்சியும் கொண்ட உலகம்மையிடம், தெல்லாங் குச்சி விளையாடிக்கொண்டிருந்த சில பையன்களில் ஒருவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு. “எக்கா, தாத்தாவ கோட்டுக்குள்ள வச்சிருக்காங்க, பாக்கப் பாவமா, இருக்கு” என்று சொன்னபோது, அவள் அழுதே விட்டாள். அதேசமயம் சம்பந்தம் இல்லாததுபோல் காட்டிக் கொண்ட அந்த ஜனங்களை, அவள் தூசுமாதிரி நினைத்துச் சேலையை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

காளியம்மன் கோவிலுக்கு வந்துவிட்டாள். எல்லோரும் வணங்கும் அந்தக் காளியம்மன் முன்னால், சண்டாளர்களைத் தண்டித்து, சான்றோர்களைப் பேணுவதாகக் கூறப்படும் அந்த லோகநாயகி முன்னால், சாக்பீலால் வரையப்பட்ட வெள்ளைக் கோட்டுக்குள், மாயாண்டி முடங்கிக் கிடந்தார். கட்டாந் தரையில், கால்களை வயிற்றுடன் இடிப்பது போல் முடங்கிக் கொண்டு, அவர் படுத்திருந்தார். பக்கத்திலேயே ஒரு ஈயப் போணி.

‘அய்யா’ என்ற உலகம்மையின் குரலைக் கேட்டதும், அவர் கண்களைத் திறந்தார். அழவில்லை. ஒருவேளை மத்தியானமே அழுது முடித்துவிட்டாரோ என்னவோ? கண்ணீரை உண்டு பண்ண உடம்பில் சத்து இல்லையோ, என்னவோ? மகளைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு, அவர் எழுந்து உட்கார்ந்தார்.

உலகம்மை, அய்யாவைப் பார்த்துவிட்டு, வடக்கே பார்த்தாள். நீர்க்குடத்துடன் செல்லும் பெண்கள், அவளையும் அவள் அய்யாவையும் ஜாடையாகப் பார்த்துவிட்டு பின்னர் தங்களுக்குள் ஏதோ