பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோட்டுக்குள் நடந்து...

67


பொருட்டாக நினைக்காமல், மழையிலும், புயலிலும் முப்பதடிப் பனையில் ஏறி ‘பயினி’ இறக்கும் அந்தத் தொழில், இப்போது மட்டமாகி விட்டது. ஆகையால், நம்மால் பனையிலதான் ஏறிகொடிகட்ட முடியல. பனையேறிகளயாவது கோட்டுக்குள்ள நிறுத்தலாம் என்று நினைத்தது போல், குட்டாம்பட்டியினர் அதாவது குட்டாம்பட்டிப் பிரபுக்கள் கடன் கொடுக்காதவர்களை, கோட்டுக்குள் நிறுத்துவது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையில் ஒன்று.

இதற்காக, எல்லோரையும், அவர்களால் கோட்டுக்குள் நிறுத்த முடியாது. அது கடன்பட்டவனின் குடும்பத்தைப் பொறுத்தது. பணபலம் இல்லாமல் ஆட்பலம் இருக்கும் நபர்களிடம், பணத்தை வசூலிக்கக் கோர்ட்டுக்குப் போவார்களே தவிர, கோட்டுக்குள் போக மாட்டார்கள். இவர்களுக்குக் கடன் கொடுக்கப்படுவதும் இல்லை. ஏழைகளிலும், ஆட்பலம் இல்லாத எளியவர்களுக்கு, கோட்டுக்குள் நிற்பதற்கு ‘குவாலிபிகேஷன்’ உள்ளவர்களுக்குத்தான், கடன் கொடுப்பதுண்டு. பல ஏழைகள், எளியவர்கள் மூலம் கடன் வாங்கிக்கொள்வதும் உண்டு.

என்னதான் கோட்டுக்குள் நிறுத்தினாலும், சில பெரியவர்கள் முன்வந்து ‘தந்திடுவான் விட்டுடு’ என்று சொல்வதும், அப்படி அவர்கள் சொல்வதைத் தட்ட மனதில்லாமலும், தானாக இரக்கப்பட்டும் சிலர் கிழித்த கோட்டை அழித்துவிடுவதுண்டு.

மாயாண்டிக்கு, இந்தக் கோட்டுக்குள் இருக்க பல குவாலிபிகேஷன்கள் இருக்கின்றன. இந்த வகையில், அவருக்கு அனுபவம் புதிது என்றாலும், கோடு கிழித்த மாரிமுத்து நாடாருக்கு. இது புதிதல்ல. மாயாண்டி, சில வருடங்களுக்கு முன்னால், பனையிலிருந்து விழுந்ததில் இறந்திருந்தால், பத்தாயிரம் ரூபாய் கிடைத்திருக்கும். கடன் படவேண்டிய அவசியமும் இருந்திருக்காது. ஆனால், பாவி மனுஷன், மேற்கொண்டும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருந்ததாலோ என்னவோ, சாகவில்லை. காலைக் குணப்படுத்த, அவர் மாரிமுத்து நாடாரின் காலைப் பிடிக்க, அவரும் மாயாண்டி பல சில்லறை வேலைகளைத் தட்டாமல் செய்ததை நினைத்துக்கொண்டு, ஐம்பது ரூபாய் கொடுத்தார். வட்டி மாதம் ஐந்து ரூபாய்தான். ஆனால் வட்டியைத்தான் மாயாண்டியால் கட்ட முடிந்தது.

மாயாண்டி எங்கே கட்டினார்? அவர் மகள் உலகம்மை மாரிமுத்து வயலில் வேலை செய்வதில் கிடைக்கும் கூலியில் நாலணாவை, நாடாரிடமே விட்டு வைத்தாள். என்றாலும் அது வட்டியைத்தான் கழித்ததே தவிர, அசல் பக்கம் அண்டவில்லை. மாரிமுத்து நாடாரும்,