பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோட்டுக்குள் நடந்து...

69


அவளை அடிப்பதற்காகக் கிட்டே போனான். உள்ளூரப் பயந்தவனான ராமசாமி. அவன் வேட்டியைப் பிடித்து இழுத்துத் தடுத்தான்.

உலகம்மை, அய்யாவின் கன்னத்தைத் தடவிவிட்டாள். அவள் தடவியதும், அந்தக் கன்னத்தில் ஈரக்கசிவு ஏற்பட்டது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு, அவள் தலையைக் கோதிவிட்டாள்.

மாயாண்டி உளறிக் கொட்டினார்.

“நான்தான் படிச்சிப் படிச்சிச் சொன்னேன் கேட்டியா பலவேசம் பேச்சக்கேட்டு அவருக்குப் பயந்து அப்டிப் பண்ணிட்டேன்னு, மாரிமுத்துகிட்ட சொல்லுன்னேன் கேட்டியா? சொல்லவுமுல்ல. என்னயும் சொல்லவிடல. என்ன பண்றது? ஒய்யா கோட்ட கட்டி ஆள நெனச்சான்; இப்போ கோட்டுக்குள்ள கிடக்கான். என்ன பண்றது? போன பிறவில யார நிறுத்துனனோ அதுக்கு காளியாத்தா இப்டி தண்டிக்கா.”

உலகம்மை, அந்தக் கோட்டுக்குள் நின்று கொண்டு. அய்யாவைத் துக்கி நிறுத்தப்போனாள். ராமசாமி, பேசப் போன பிராந்து சாமியை அடக்கிவிட்டு, “அவன வெளில கொண்டு வந்தியானா தெரியும் சேதி” என்றான்.

இதற்குள், அந்தப் பக்கமாக வந்த பலவேச நாடார், வேறு பக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு கண்டு கொள்ளாதவர்போல் போனார். “பலவேசம், நாயிருக்கியல எதுக்குங் கவலப்படாண்டாமுன்னு காலையில் கூட வீட்ல வந்து சொன்னியே - இப்ப ஏன்யா அப்டி மொகத்த வச்சிக்கிட்டுப் போற ஓஹோ! நீ இருக்கையிலதான் நான் கவலப்படக்கூடாது. இப்பதான் நீ இருக்காம நடந்துதான போற” என்று மாயாண்டி முணுமுணுத்தார்.

பலவேச நாடார். சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாததற்குத் தைரியமின்மை காரணமல்ல. சரோஜா கல்யாணம் நின்னது நின்னதுதான். எப்படியும் மவனுக்கு மடக்கிப் போட்டுடலாம். இந்தச் சமயத்துல வெண்ணெய் திரளும் போது, சட்டியை உடைக்க அவர் விரும்பவில்லை. அதோடு உலகம்மை ‘ஒமக்குப் பயந்து போவலன்னு - எவ்வளவு திமிரா பேசுனா பயமவா படட்டும்.’

என்ன செய்யலாம் என்று புரியாமல், இடுப்பில் செருகியிருந்த சின்னக் கத்தியை அவ்வப்போது பிடித்துக்கொண்டே உலகம்மை நிலைகுலைந்து நின்றபோது, மாரிமுத்து நாடாரே அங்கே வந்தார்.