பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஒரு கோட்டுக்கு வெளியே ...



எதிர்ச்சுவரில் பல துப்பாக்கிகள். பல்லி மாதிரி அப்பிக்கிடந்தன. உண்மையிலேயே, அவர் ரைட்டர்தான், அந்த வார்த்தையின் தமிழ் மொழிபெயர்ப்பின்படி, அவரும் சிறந்த எழுத்தாளர்தான். எப்.ஐ.ஆரில், என்னென்ன காரணங்களை எப்படி எப்படிச் சிருஷ்டிக்கலாம். என்று நினைத்தார். என்றாலும், சிருஷ்டிக்கும். பிரமனை, சிவன் தலையைக் கிள்ளியதுபோல், புதிய சப்-இன்ஸ்பெக்டர் பையன் இவரையும், இவரது சிருஷ்டியையும் அவ்வப்போது 'கிள்ளிக் கொண்டிருந்தாலும், அவரது சிருஷ்டித்தல், திருஷ்டிபடும் அளவிற்கு சுறுசுறுப்பாக மீண்டும் வளரும்.

இரண்டாவது அறையில், விசாலமான மேஜையும், அதன்மேல் என்னவெல்லாமோ கிடந்தன. ஆளில்லாத நாற்காலி. அதற்கு வலது பக்கத்தில், குறுக்குநெடுக்கான கம்பிகளைக் கொண்ட "லாக்கப் அறை". உள்ளே நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். கம்பிகளுக்கு வெளியே ஒரு கான்ஸ்டபிள் லத்திக் கம்போடு உலாத்திக் கொண்டிருந்தார்.

உள்ளே நின்று கொண்டிருந்தவர்கள், கான்ஸ்டபிளிடம் மாமன் மச்சான் மாதிரி பேசிக்கொண்டிருந்தார்கள்.

  • எஸ்.ஐ. எப்ப ஸார் வருவார்?"

"நாளக்கி மந்திரி வரார். அதுக்காவ எங்கெல்லாமோ அலைஞ்சிக்கிட்டிருக்கார். சர்க்கிளும் அவரும் டி.எஸ்.பி.கிட்ட போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஒன் சம்சாரத்துக்கு இப்ப உடம்பு எப்படிடா இருக்கு? இப்ப அவா காய்க்காளா?"

"அவளால முடியல ஸார்? எப்ப ஸார் விடுவிங்க?"

"எஸ்.ஐ. வரட்டும்."

"இவன்கிட்ட படிச்சிப் படிச்சி சொன்னேன். கேக்கல ஸார். மாதக் கட்சி, வாண்டாண்டான்னு சொன்னேன். உருவத்தலயன் கேக்கல."

"மாதக்கட்சில நாமதான் ஒங்களுக்கு கைகொடுக்கணுமுன்னு சொன்னேன். சரிதானே ஸார்? நேத்து செங்கோட்டை பஸ்ல வந்திறங்கினியள. எங்க ஸார் போயிருந்தீங்க?"

"மாமியாருக்கு உடம்பு சரியில்ல. ஒருநட போயிட்டு வந்தேன். ஏய் அடுத்தவாரம் கொஞ்சம் மலத்தேனு வேணும். கிடைக்குமா? மாமியாருக்கு மருந்துக்கு வேணும்."